Site icon அநேகன்

விவேகம் அஜித்தின் உழைப்பு வென்றதா?

‘விவேகம்’ ஆண்டுகளுக்குப் பிறகு தல அஜித் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம். பல்கேரியாவின் உளவுத் துறை அதாவது கௌன்டர் டெரரீஸில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் அஜய் குமார் (அஜித்) உடன் 5 நண்பர்கள். அதில் விவேக் ஓப்ராயும் ஒருவர். கஜோல் அகர்வால், தமிழ் மணம் வீசும் யாழினி என்ற கதாபாத்திரம் ஏற்றுள்ளார்.

உலகை அழிக்கும் வல்லமை படைத்த இயற்கை பேரிடரை உருவாக்கும் மிகப் பெரிய கருவியை தீவிரவாத கும்பல் கடத்திவிடுகின்றது. அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு அஜித் மற்றும் நண்பர்களுக்கு வழங்கப்படுகின்றது. இதில் முக்கிய நபராக கருதப்படும் நத்தாஷாவை (அக்ஹரா ஹாசன்) அஜித் தேடிச் செல்கிறார்.

அவரை தேடிப் பிடிக்கும் போதுதான், இந்த தீவிரவாத நடவடிக்கைக்கு நத்தாஷா பலிகடா ஆகியுள்ளது தெரிய வருகின்றது. பின்னர் அவரைக் காப்பாற்றவும், இயற்கை பேரிடர் கருவியை செயலிழக்கச் செல்லும் வழியில் நத்தாஷா கொல்லப்படுகிறார், அதன் பிறகு அஜித்தின் உற்ற நண்பர்கள் அவரை சுட்டு வீழ்த்துகின்றார்கள். அதோடு காஜல் அகர்வாலையும் கொல்ல முயற்சிக்கின்றார்கள். அஜித் மீண்டு வந்தாரா? கஜோலை காப்பாற்றினாரா? இயற்கைப் பேரிடரை உருவாக்கும் கருவியை செயலிழக்கச் செய்தாரா? தம்மை வீழ்த்திய நண்பர்களை என்ன செய்தார் என்பதே மீதிக்கதை.

படம் முழுக்க அஜித். வேறு எதுவும் இல்லை. தமக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்திற்காக கடுமையாக உழைத்திருப்பது படத்தை பார்க்கும் போது தெரிகின்றது. ஆனால் அந்த உழைப்பு வீணாகி விட்டதே என்பதுதான் உண்மையான அஜித் ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது. இருப்பினும் இந்த திரைப்படத்திற்கான உழைப்பை பாராட்டித்தான் ஆக வேண்டும்.

வெளிநாட்டில் திரைப்படம் எடுக்கிறோம் என்றால், லாஜிக்கே இருக்கக்கூடாது என்று இயக்குநர் முடிவு செய்து விட்டார் போல. படம் முழுக்க அதை பார்க்க முடிகின்றது. 80 நாடுகளில் தேடப்படும் தீவிரவாதி என அஜித் சித்தரிக்கப்படுகின்றார். ஆனால் சர்வ சாதரணமாக மக்கள் நடமாடும் பகுதிகளில் உலா வருகிறார். அதோடு உச்சகட்ட பாதுகாப்பு உள்ள பகுதிகளில் நுழைந்து, அனைத்தையும் சாதித்து விட்டு, அசால்டாக வெளியே வருவதை எப்படி ஏற்று கொள்வது சிவா!

விவேக் ஓப்ராய் வில்லனா? நண்பனா? என்ற சந்தேகம் திரையரங்கை விட்டு வெளியே வரும் போது கூட விலகவில்லை. பொதுவாக தமிழ்ப்படங்களில் ஹீரோவை பற்றி நண்பர்கள்தான் பெருமையாகப் பேசுவார்கள். ஆனால் இதில் படம் தொடங்கியது முதல் இறுதி நிமிடம் வரை அவன் போராடாமல் சாகவும் மாட்டான் போகவும் மாட்டான் இப்படி அனைத்து பஞ்ச் வசனங்களையும் வில்லன்தான் பேசுகிறார்.

காஜல் அகர்வால், படம் முடிவு வரை அழுது கொண்டே இருக்கின்றார். அதுவும் உச்சகட்ட இறுதிக் காட்சியில் தூள் படப் பாணியில் பாடல் பாடுவது முடியலடா சாமி. கொஞ்சம் நேரம் வந்தாலும் அக்ஹரா ஹாசன் மனதில் நிற்கிறார். உயிர் பிரியும் காட்சியில் உலக நாயகனை நினைவு படுத்தினார். அவர் இருக்கும்வரை ரசிக்க முடிந்த விவேகம் அதற்கு பிறகு விவேகத்தை இழந்து விட்டதுதான் பரிதாபம்.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை. செவைவெர், தலை விடுதலை அஜித் ரசிகர்களுக்கான பாடல். பின்னணி இசை. எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. காதுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்.  கண் வலிக்கும் அளவிற்கு ஒளிப்பதிவு செய்த வெற்றி பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அஜித் அளவிற்கு இந்த படத்திற்காக உழைத்த மற்றொரு நபர் இவர்தான். கதை திரைக்கதை வசனம் இயக்கம் என பெருமையாகச் சொல்லும் அளவிற்கு இந்த படத்தில் இயக்குநர் சிவாவின் தனிப்பட்ட சிறப்புகள் இல்லாமல் போனது வருத்தம்தான்.

ஹாலிவுட் திரைப்படத்திற்கு இணையான தமிழ்ப்படம் என வெளிவருவதற்கு முன்னமே பேசப்பட்ட திரைப்படம் விவேகம். இந்த திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியீடு கண்டது. அஜித் என்ற மிகப் பெரிய ஆலமரத்தின் உழைப்பு வீணாகி விட்டதை திரையில் காண முடிகின்றது. இருப்பினும் அவரின் உழைப்பிற்காக இந்தப் படம் வெற்றியடைய வேண்டும்!

மொத்தத்தில் விவேகம்!
தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம்
சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றம்

Exit mobile version