Site icon அநேகன்

பக்காத்தான் ஹராப்பானுக்கும் டாக்டர் மகாதீருக்கும் மக்கள் கற்றுக் கொடுத்த பாடம் இது -சைட் ஹூசின்

கோலாலம்பூர், நவ.17-

தேசிய முன்னணிக்கு ஆதரவாக அமைந்த தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தல் முடிவு துன் டாக்டர் மகாதீர் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பானுக்கு நல்லதொரு பாடமாகும் என்று கூறப்படுகிறது.

“நடப்பு அரசாங்கத்தால் மக்கள் ஏமாற்றமடைந்திருப்பதை இங்கு தெளிவாகக் காண முடிகிறது. அதற்காக  பக்காத்தான் ஹராப்பான் குறிப்பாக டாக்டர் மகாதீருக்கு அவர்கள் பாடம் கற்பிக்க விரும்புகின்றனர்.எதனை விரைவாகச் செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். இனியும் அவர் வார்த்தை மாறிப் பேசக் கூடாது” என்று பிகேஆர் தோற்றுநர்களில் ஒருவரான சைட் ஹூசின் தனது  டுவீட்டரில்  குறிப்பிட்டார்.

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ டாக்டர் வீ ஜெக் செங் 25,466  வாக்குகளுடன் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்த வேளையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கார்மானி சார்டினி 10,380 வாக்குகளைப் பெற்று தோல்வி கண்டார்.

கார்மானியோடு ஜெக் செங்கை எதிர்த்துப் போட்டியிட்ட இதர வேட்பாளர்களான  கெராக்கானின் வெண்டி சுப்ரமணியம் 1,707 வாக்குகளும், பெர்ஜாசா வேட்பாளர் டத்தோ டாக்டர் பட்ருல்ஹிஷாம் அப்துல் அஜிஸ் 850 வாக்குகளும் உள்ளூர்வாசிகளான ஆங் சுவான் லோக் 380 வாக்குகளும்  ஃபாரிடா அர்யானி அப்துல்  32 வாக்குகளும் பெற்று  தோல்வி கண்டனர்.

Exit mobile version