தஞ்ஜோங் மாலிம், ஆக. 26-
உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டிலான தமிழ் இணைய மாநாடு இரண்டாவது நாளாக நேற்று இங்குள்ள சுல்தான் இத்ரிசு கல்வியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் உலகளாவிய நிலையில் 60 ஆய்வாளர்கள் தங்களின் கட்டுரைகளைப் படைத்துவரும் வேளையில் அதில் ஒருவராக திறம்பட கட்டுரைபடைத்து பேராளர்களிடம் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றார் 11 வயதான, மகா கணேசா வித்யாசாலை தமிழ்ப்பள்ளியின் மாணவி பேரரசி முத்துக்குமார்.
கல்விகற்றல் தகவல் தொழில் நுட்பக் கூறுகள், கல்விச் செயற்கைக் கோள்கள் (EDUCATIONAL SATELLITE), சுற்றுப் பூர்த்தியான தொலைக்காட்சி (CCTV), ஒலிநாடாப் பெட்டி (TAPE RECORDER), கணினியின் பயன்பாடு (COMPUTER APPLICATION), இணையத்தளப் பயன்பாடுகள் (INTERNET IN EDUCATION), கல்வியில் டெலிமேடிக்ஸின் பயன்பாடு (EDUCATIONAL USEFUL IN TELEMATICS), வீடியோ கான்பரன்சிங் (VIDEO CONFERENCING), இ- கற்றல் (E-LEARNING), கல்வியில் தகவல் தொழில் நுட்பத்தின் பங்கு, இன்றைய தகவல் தொழில்நுட்பங்கள், கற்பவர்கள் மையமாக மாற்றுவதில் தகவல் தொழில் நுட்பத்தின் பங்கு, பாடம் கற்பித்தலில் மாணவர் மையக் கற்பித்தல், அரசாங்க மற்றும் அரசு சாரா அமைப்புகள் சேவை ஆகிய தலைப்புகளை மையப்படுத்தி அவர் தமது கட்டுரையைப் படைத்தார்.
இதுவரை தட்டச்சு வழி தமிழில் உள்ளீடு செய்த நாம் இனி குரல் வழி உள்ளீடு செய்ய புதிய நுட்பத்தைக் ‘கூகுள் உருவாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து செல்லினமும் குரல் வழி உள்ளீடு செய்ய புதிய நுட்பத்தைக் கையாள்கிறது என அவர் தமது முடிவுரையில் குறிப்பிட்டார். இவரது படைப்பைக் கண்டு வியந்த பேராளர்கள் கரகோசத்தை எழுப்பி பாராட்டினை தெரிவித்தனர்.
