Site icon அநேகன்

வேறு வழியில்லை; நாடாளுமன்றத்தை உடனே கலையுங்கள்! -இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர், நவ.17-

மக்களின் நம்பிக்கையைப் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் இழந்துவிட்டதால், அக்கூட்டணி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமென, நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவரான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் பக்காத்தானை நிராகரிப்பது (தஞ்சோங் பியாய்) இது முதல்முறை அல்ல. மாறாக, கேமரன்மலை, செமிக்ஞே, ரந்தாவ் ஆகிய இடைத்தேர்தல்களிலும் தொடர்ச்சியாக நிராகரித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கேமரன்மலையில் மூவாயிரத்திற்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளில் தோல்வி கண்டிருந்த பக்காத்தான், செமிக்ஞே, ரந்தாவ் ஆகிய தேர்தல்களில் நான்காயிரத்திற்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளில் தோல்வி கண்டிருந்தது. தற்போது, தஞ்சோங் பியாயில் 15-ஆயிரத்திற்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளில் அக்கூட்டணி படுதோல்வி கண்டுள்ளது.

நாட்டை பக்காத்தான் அரசாங்கம் வழிநடத்துவதற்கான நம்பிக்கையை மக்கள் கொண்டிருக்காததை அத்தேர்தல்களின் முடிவுகள் காட்டுகின்றது. அதனால், நாடாளுமன்றத்தைக் கலைப்பதைவிட அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை. தஞ்சோங் பியாயில் பக்காத்தான் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய நிலையிலும், தோல்வியைக் கண்டுள்ளது.

புறநகர் மக்களுக்கான உதவிகளைக் குறைக்கும் பக்காத்தானின் கொள்கைகள், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அரசாங்கத்தின் தோல்விகளாக பார்க்கப்படும் கொள்கைகள் வாழ்க்கை சுமையை அதிகரித்திருப்பது, மக்களிடையே அதிருப்திகளையும் அதிகரிக்க செய்துள்ளது. ஒருமுறை ஏமாந்தது போதும். தொடர்ச்சியாக, ஏமாற மக்கள் விரும்பவில்லை என டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.

Exit mobile version