Site icon அநேகன்

அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியே தஞ்சோங் பியாவில் பக்காத்தான் ஹராப்பான் தோல்வியுறக் காரணம்! -டத்தோஸ்ரீ அன்வார்

  கோலாலம்பூர், நவ.18-

தஞ்சோங் பியா இடைத் தேர்தலில் சீன வாக்காளர்களின் வாக்குகளில் சரிவு ஏற்பட்டதை பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஒப்புக் கொண்டார்.

இதன் பொருட்டு, பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) வேட்பாளர் கார்மைனி சார்டினி தோல்வியடையும் அளவுக்கு மக்கள் பக்காத்தான் ஹராப்பான் மீது கொண்டிருக்கும் வெறுப்பு மீது நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அன்வார்.

“சீனர்கள் மட்டுமின்றி  மலாய்க்கார வாக்காளர்கள் மத்தியிலும் மாற்றம் ஏற்பட்டதைக் காண முடிகிறது. இதற்கு இன பிரச்னை காரணம் என்று கூற முடியாது.பல்லின மக்களின் அதிருப்தியை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது”.

“நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அளவுக்கு செய்தி மிகவும் தெளிவாக அளிக்கப்பட்டுள்ளது” என்று  தஞ்சோங் பியாவில் சீன வாக்காளர்களின் ஆதரவு மோசமான அளவு சரிந்துவிட்டது குறித்து கருத்துரைக்கக் கேட்டபோது போர்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் இவ்விதம் குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு நடைபெற்ற சில இடைத் தேர்தல்கள் குறிப்பாக தஞ்சோங் பியாவ் தேர்தலின் தோல்வியில் இருந்து பக்காத்தான் ஹராப்பான் விரைவில் பாடம் கற்றுக் கொள்வது அவசியம் என்று அன்வார் வலியுறுத்தினார்.

“இதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லையென்றால் ஆட்சி புரிவதில் எந்தவொரு பயனும் இல்லை.தகவல் கிடைத்துவிட்டது. மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் நேரத்தைச் செலவிட வேண்டும்” என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த இடைத் தேர்தல் படுதோல்வியைத் தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பான் விரைவில் நாடாளுமன்றத்தைக் களைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கோரிக்கை விடுத்திருப்பது குறித்து கேட்கப்பட்டபோது அதிர்ச்சியான இந்தத் தோல்வியை இக்கூட்டணி ஏற்றுக் கொள்வதோடு தொடர் நடவடிக்கைகளை எடுக்கும்படி அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version