Site icon அநேகன்

இந்திய மாணவர்களின் சாதனைகள் பெருமைக் கொள்ள செய்கின்றன -எம்.குலசேகரன்

கோலாலம்பூர், நவம்பர் 21-

இவ்வாண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளின் தேர்வு முடிவுகள் ஒவ்வோர் ஆண்டும் முன்னேற்றம் அடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் இவ்வாண்டு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இவ்வாண்டும் சிறந்த தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

இந்த முன்னேற்றத்திற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மாணவர்கள், அவர்களை சிறப்பான முறையில் வழிகாட்டிய ஆசிரியர்கள், தமிழ்ப்பள்ளிகளை வழிநடத்திய தலைமையாசிரியர்கள், பக்க பலமாக இருந்த பெற்றோர்கள் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்காக பாடுபட்டு இயங்கி வரும் அனைத்து இயக்கங்களுக்கும் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு நம் நாட்டில் அவர்களுக்காக நடத்தி வரும் அறிவியல் போட்டிகள், இலவச பிரத்தியேக வகுப்புகள், வெளிநாட்டில் பெற்ற சாதனைகள் பல சாதனைகளை அடிக்கிக் கொண்டே போகலாம். சமீபத்தில் அனைத்துல அறிவியல் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் சாதனைகளைப் பார்த்து வியந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மனிதவள அமைச்சும் கல்வி அமைச்சும் ஒன்றிணைந்து தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென ஏர் ஆசியாவுடன் ஒப்பந்தம் செய்து வந்தோம். இப்படிபட்ட திட்டங்கள் மேலும் தொடரப்பட வேண்டும். நமது பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவதை முக்கிய பங்காக நினைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நம் மாணவர்கள் தொடக்க கல்வியை சிறப்பாக பெற்றிருந்தால் மட்டுமே இடைநிலைப்பள்ளிகளில் அவர்களின் கல்வி தொடர்ந்து மேம்பாடு காண முடியும் என்பதை மறக்க கூடாது.

இவ்வகையான தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைகள் நம் சமுதாயம் தலை நிமிர்ந்து நடப்பதற்கு வழிசெய்கிறது, ஆரம்ப பள்ளிகளில் மட்டுமல்லாது தொடர்ந்து உயர்கல்வி செல்லும் வரை நம் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும். நம் நாட்டில் இந்தியர்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்வதற்கு கல்வி மிக முக்கியம் என்பதை மாணவர்கள் சிறு வயதிலேயே அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version