பெட்டாலிங் ஜெயா, நவ.23-
2012 சொஸ்மா சட்டத்தை அகற்றுவது குறித்து விவாதிக்க, தடுப்பு மற்றும் உள்துறை விவகாரங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு செயற்குழுவின் தலைவர் டத்தோ மன்சோர் ஒத்மான், தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோரைச் சந்திக்கவுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில், சுவாராம் உள்பட மனித உரிமை சார்ந்த குழுக்களுடன் தனது தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பிறகு, டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோரைச் சந்திப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டதாக நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினருமான மன்சோர் ஒத்மான் தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர்கள் மீது அந்த அமைப்புகள், இரக்கம் தெரிவித்துள்ளன. அச்சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அது குறித்து, தாங்கள் ஆய்வை மேற்கொண்ட பிறகு, அதனை அமலாக்கத் தரப்புகளிடம் கொண்டு செல்வோம்.
இதற்கு முன்பு அப்துல் ஹாமிட் பாடோரைச் சந்தித்தோம். நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவதற்குள், அதாவது அடுத்த வாரத்திற்குள் அவரை மீண்டும் சந்திக்கவுள்ளோம் எனவும் மன்சோர் ஒத்மான் குறிப்பிட்டார்.

