Site icon அநேகன்

மலேசியாவின் இறுதி சுமத்ரா காண்டாமிருகம் உயிரிழந்தது!

கோத்தா கினபாலு, நவ.24-

நாட்டில் இருந்த இறுதி சுமத்ரா காண்டாமிருகமான இமான் நேற்று உயிரிழந்தது. போர்னியோவிலுள்ள காண்டா மிருகம் பாதுகாப்பு மையத்தில், பராமரிக்கப்பட்டு வந்த அந்த காண்டாமிருகம், சனிக்கிழமை மாலை மணி 5.35 அளவில் இறந்ததாக, சபாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரிஸ்டின் லியூ தெரிவித்துள்ளார்.

இமானின் மறைவு இயற்கையானது. அதன் உடனடி விளைவை ஓர் அதிர்ச்சியாக வகைப்படுத்தலாம். அண்மையக் காலமாக, புற்றுநோய் பாதிப்பை எதிர்நோக்கிவந்த இமானை, காப்பாற்றுவதற்கு முயற்சித்தும் பலனில்லாமல் போனதாகவும் கிரிஸ்டின் லியூ கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டு மார்ச்சில், பிடிக்கபட்ட இமான் உயிரிழக்கும் வரையில், நல்ல முறையில் பராமரிக்கப்பட்டது. ஆயினும், சிறுநீர்ப்பையில் ஏற்பட்ட அழுத்தத்தைத் தொடர்ந்து, இமான் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தது.

காண்டாமிருகங்களின் ஐந்து இனங்களில், சுமத்ரா வகை காண்டாமிருகம் ஒரு வகையாகும். தெற்கிழக்காசியா, இந்தியா, தென்மேற்கு சீனா வரையில், பரவினாலும், தற்போது, சுமத்ராவில் 4 காண்டாமிருகங்கள் மட்டுமே உள்ளதாக தெரிகின்றது.

மலேசிய வனவாழ் துறையின் அமலாக்கத் தரப்பு, இந்தோனேசியாவின் ஒத்துழைப்புடன் செயற்கை கருத்தரித்தல் முறையின் கீழ் சுமத்ரா வகை காண்டாமிருகங்களைப் பாதுகாக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான, அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் இன்னும் செய்துக்கொள்ளப்படவில்லை என்றாலும், அம்முயற்சியைத் தொடர சபா ஆர்வம் கொண்டுள்ளது.

இமான் மற்றும் மே 27ஆம் தேதி இறந்த தாம் எனும் ஆண் காண்டாமிருகத்தின் செல்கள் தற்போது, உயிருடன் வைக்கப்பட்டிருப்பதாகவும் கிரிஸ்டின் லியூ கூறியுள்ளார்.

இந்நிலையில், நீர், நிலம் இயற்கைவள அமைச்சர் டத்தோஶ்ரீ சேவியர் ஜெயக்குமார், சுமத்ரா காண்டாமிருகமான இமான் இறந்ததற்கு தமது இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Exit mobile version