Site icon அநேகன்

மலாக்கா பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை வருத்தமளிக்கிறது – அன்வார் !

கோலாலம்பூர், நவ.26 –

மலாக்கா மாநில அரசாங்கம் சட்டமன்றத்தில் முன் வைத்த தீர்மானம் ஒன்று தோற்கடிக்கப்பட்டதில் , இரண்டு  பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை தமக்கு வருத்தம் அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் தாம் அவர்களைத் தொடர்புக் கொண்டுள்ளதாகவும் உரிய விளக்கம் கோரப்படும் என்றும் அன்வார் தெரிவித்தார். மாநில அரசாங்கத்தின் முடிவை அவர்கள் மதிக்க வேண்டும். அதேவேளையில் மலாக்கா முதலமைச்சர் அட்லி சஹாரியின் முடிவை அவர்கள் ஆதரித்திருக்க வேண்டும் என அன்வார் தெரிவித்தார்.

மலாக்கா மாநில பி.கே.ஆர் தலைவர் அப்துல் ஹலிம் பாச்சிக்கை , மேலவை உறுப்பினராக நியமனம் செய்வதற்கான தீர்மானம் ஒன்று அம்மாநிலத்தின் சட்டமன்றத்தில் முன் வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு 12 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதவளித்த வேளையில், 13 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

இதில், பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலியின் ஆதரவாளர்கள் என கூறப்படும் மாச்சாப் ஜெயா  சட்டமன்ற உறுப்பினர் கினி லிம் மற்றும் ரெம்பியா சட்டமன்ற உறுப்பினர் முஹமட் ஜைலானி காமிஸ் வாக்களிப்பு தொடங்குவதற்கு முன்பாக கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

மலாக்கா மாநில பி.கே.ஆர் தலைவர் ஹலிம் பாச்சிக், டத்தோ ஶ்ரீ அன்வாரின் ஆதரவாளர் என்பது குறிப்பிடதக்கது.  கட்சியின் உட்பூசல் காரணமாக அவ்விரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கவில்லையா என நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அன்வார், அவ்விருவரும் தங்களின் அரசியலின் நிலைப்பாட்டைக் கடந்து மாநில அரசாங்கத்தின் முடிவை ஆதரித்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மலாக்கா மாநில அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தில் அந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் செயல்படுகிறார்களா என்ற கேள்வியும் அன்வாரிடம் எழுப்பப்பட்டது. அது குறித்து கருத்துரைத்த அன்வார், பி.கே.ஆர் கட்சி மலாக்கா முதலமைச்சர் அட்லி சஹாரியின் தலைமைத்துவதுக்கு முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்தார்.

Exit mobile version