கோலாலம்பூர், திசம்பர் 6:-
கெடா மாநிலத்தில் நிகழ்ந்த கோவில் உடைப்பை ஈடுகட்ட அம்மாநில மந்திரி பெசார் மாற்று நிலம் கொடுத்து கோவிலையும் கெடா அரசாங்கத்தால் கட்டித் தரப்பட வேண்டும். மேலும், மலேசிய இந்தியர்கள் மனம் புண் படும் படி கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் வெளியிட்டக் கூற்றுக்கு மன்னிப்பும் கேட்க வேண்டும் என சிலாங்கூர் மாநில ம.இ.கா. கண்டனத்தைப் பதிவு செய்தது.
அண்மையில் கெடா மாநிலத்தில் கோவில் உடைப்பு விவகாரம் நாடளாவிய நிலையில் பேசப்பட்டு வருகிறது. சமூகத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அந்த வரிசையில் சிலாங்கூர் மாநில ம.இ.கா.வும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
ம.இ.கா. பதிவை இரத்து செய்ய வேண்டும் என்று முகமட் சனுசி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், ம.இ.கா. , ஜ.செ.க ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மது போதையில் ஏதேதோ உளறிக் கொட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இக்கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாக சிலாங்கூர் ம.இ.கா.வின் தலைவர் எம். பி. இராஜா தெரிவித்துள்ளார்.
கோவில் உடைப்பு தொடர்பாக கெடா ம.இ.கா.வையோ அங்குள்ள இந்தியர் அமைப்புகளையோ அல்லது இந்து அமைப்புகளையோ அழைத்து கலந்து பேசாமல் தாந்தோன்றித் தனமாக அவர் செயல்பட்டு உள்ளார். மேலும், மந்திரி பெசாரின் ஆலோசகராக கெடா மாநிலத்தில் யாரும் பிரதிநிதியாக நியமிக்கப்படாததால் இந்தியர்கள் பிரச்சனை குறித்து அவ்வரசாங்கம் எவ்வித முனைப்பும் காட்டாமல் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
“எனவே, கோலா கெடா தாமான் பெர்சத்து முனீசுவரர் திருக்கோவிலை உடைத்த விவகாரத்தில் கெடா மாநில மதிரி பெசார் மாற்று நிலம் கொடுத்து கோவிலையும் கெடா அரசாங்கத்தால் கட்டித் தரப்பட வேண்டும். மேலும், மலேசிய இந்தியர்கள் மனம் புண் படும் படி அவர் வெளியிட்டக் கூற்றுக்கு மன்னிப்பும் கேட்க வேண்டும் என சிலாங்கூர் மாநில ம.இ.கா.வின் தலைவர் எம். பி. இராஜா வலியுறுத்தி கூறியுள்ளார்.“

