கோலா சிலாங்கூர், திசம்பர் 7:-
கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் இருக்கும் “புன்சாக் ஆலாம் மலாய்க்காரர்கள் பகுதி!” என ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் முகம்மாட் சையிட் ரோஸ்லி கூறியுள்ளார்.
மலேசியாவில் மீண்டும் இனவாதக் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் வெளியிட்டு வருவது பொது மக்களிடத்தில் சர்ச்சையைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது என அப்பகுதியில் வசித்து வரும் கனகராஜா முனியாண்டி அக்கருத்துக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
பண்டார் புன்சாக் ஆலாம் இக்கோவோர்ல்ட் (ECOWORLD) ஜெயா குரோசர் (Jaya grocer) பேரங்காடியில் மது விற்பனைக்கு எதிராக அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகம்மாட் சையிட் ரோஸ்லி சில நடவடிக்கைகளை முன்னெடுத்தார். புதிதாகத் திறக்கப்பட்ட ஜெயா குரோசரில் மதுவும் ஹலால் அல்லாதப் பொருட்ளின் விற்பனை கூடாது என்று இணையம் வழி பொது மக்களிடம் ஆதரவுக் கையொப்பம் திரட்டி வந்தார். சுமார் 5,000க்கும் மேலானோர் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அந்த மனுவை ஜெயா குரோசரின் நிர்வாகியிடமும் கொடுத்து மதுவும் ஹலால் அல்லாதப் பொருட்கள் வைத்திருக்கும் பகுதிக்கான நுழைவாயிலை மூடிவிட்டார்.
மதுவுக்கு எதிரான அவரது நடவடிக்கை பாராட்டத்தக்க ஒன்றுதான். ஆனால், அவ்விவகாரத்தைத் தனது முகநூல் பக்கத்தில் நிழற்படங்களோடு வெளியிடும்போது, “இது புன்சாக் ஆலாம் ! இது மலாய்க்காரர் பகுதி!” என அவர் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவு அப்பகுதியில் வாழும் மலாய்க்காரர் அல்லாதோரின் மனதைப் பெரிதும் புண் படுத்தி இருப்பதாக கனகராஜா தெரிவித்தார்.
தமக்குத் தெரிந்த வரையில் மலேசிய நாட்டில் எந்தப் பகுதியையுமே இன வேறுபாட்டின் அடிப்படையில் பிரித்து அறிவிக்கப்பட்டவில்லை. அவர் வெளியிட்டுள்ளக் கருத்தின் படி புன்சாக் ஆலாம் அதிகாரப்பூர்வமாக மலாய்க்காரர் பகுதியாக அறிவிக்கப்பட்டதை உறுதி செய்கிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Undang-Undang Tubuh Negeri Selangor 1959, Enakmen Rizab Melayu 1913, Kanun Tanah Negara 1965 ஆகியச் சட்டங்களைப் புரட்டிப் பார்த்ததில் எதிலுமே இது போன்ற அறிவிப்பு செய்ததாக இல்லை. ஆகையால், சட்டத்திற்குப் புறம்பாக இந்த அறிவிப்பை எப்படி முகம்மாட் சையிட் ரோஸ்லி செய்தார் எனவும் கனகராஜா கேள்வி தொடுத்துள்ளார்.
மலேசியாவின் எந்த நிலப்பகுதியையுமே குறிப்பிட்டு ஓர் இனத்துக்குச் சொந்தமான இடம் என வகைப்படுத்தப்படவில்லை.
எனவே, முகம்மாட் சையிட் ரோஸ்லியின் அந்த அறிவிப்பு சிலாங்கூர் மக்களின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் கேடு விளைவிக்கும் ஓர் அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.
புன்சாக் ஆலாம் மக்களோ அல்லது சிலாங்கூர் மக்களோ மற்றவர்களை அந்நியர்களாகப் பார்த்ததே இல்லை. வேற்று மாநிலத்தில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்து யார் சிலாங்கூருக்கு வந்தாலும் இம்மண்ணின் வாய்ப்புகளையும் வளங்களையும் ஒற்றுமையாக இருந்து பகிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், முகம்மாட் சையிட் ரோஸ்லியின் இனவாதக் கருத்துகள் மலாய்க்காரர் அல்லாதோரை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, ஜெராம் சட்டமன்ற உறுப்ப்ப்பினர் முகம்மட் சையிட் ரோஸ்லி தனது இனவாதக் கருத்தை மீட்டுக் கொள்வதோடு அது போன்ற இனவாதக் கருத்துகளை வெளியிட்டதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும் என கனகராஜா கேட்டுக் கொண்டார்.

