Site icon அநேகன்

சாப்பாட்டில் கரப்பான்பூச்சி: பொய்யுரைத்த ஆடவரை 100,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது நீதிமன்றம்

ஜொகூர் பாரு டிசம்பர் 9

ஆதாரம் இல்லாமல் அவதூறு காணொளியைத் தயாரித்து சமூக ஊடகத்தில் வைரலாகிய ரேமன் ஹரிதாஸ் (வயது 33) பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளர் எஸ்எம் சுந்தரத்திற்கு இழப்பீடாக 100,000 மலேசிய ரிங்கிட்டை வழங்க வேண்டுமென ஜொகூர்பாரு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2017 நவம்பரில் ஜொகூர்பாரு ஜாலான் துருஸில் உள்ள முத்து உணவகத்தில் சாப்பிடும்போது அதில் கரப்பான்பூச்சி இருந்ததாகவும் ரேமன் தம்மிடம் தொலைப்பேசியில் அழைத்து இதுகுறித்து நேரடியாகச் சந்திக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டதாக உணவக உரிமையாளர் சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறினார்.

நீங்கள் கூறியதைப் பல அப்படி எதுவும் நடக்கவில்லை. இதுகுறித்து உணவக பணியாளர்களிடம் நான் விசாரித்தேன். சம்பவம் நடந்தபோது அங்கிருந்த பணியாளர்களிடம் நீங்கள் இதனைத் தெரிவித்து இருக்கலாமே? ஏன் அதனைச் செய்யவில்லை என நான் ரேமனிடம் வினவினேன்.

இருந்தபோதிலும் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண அவரை நான் சந்தித்தேன். இந்த விவகாரத்தைப் பெரிது படுத்தக்கூடாது என்றால் சமரசம் செய்து கொள்ளலாமா? என அவர் கேட்டார்.

ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கினால் இப்பிரச்சனையை இத்தோடு விட்டு விடுகிறேன். எவ்வளவு தருவீர்கள்? என்று தம்மிடம் பேரம் பேசப்பட்டதாகவும் சுந்தரம் தெரிவித்தார்.

எந்த ஆதாரமும் இல்லாமல் நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டை என்னால் ஏற்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறி விட்டேன். அதன் பிறகு போலீஸ் புகார் செய்ததாகவும் சுந்தரம் குறிப்பிட்டார்.

இவையெல்லாம் நடந்து முடிந்த மறுநாள் உணவகத்திற்கு எதிரே நின்றுகொண்டு காணொளி ஒன்றைப் பதிவு செய்து சமூக ஊடகமான ஃபேஸ்புக் வாட்ஸ் அப்பில் ஆகியவற்றில் ரேமன் வைரலாக்கினார்.

இதனால் என்னுடைய உணவகத்தை வாடிக்கையாளர்கள் முற்றாகப் புறக்கணித்து விட்டனர். அதன் காரணமாக பெரும் பாதிப்புக்குள்ளாகி மன உளைச்சலுக்கும் ஆளானேன்.

சம்பந்தமே இல்லாமல் எந்த ஓர் ஆதாரமும் இன்றி எங்கள் உணவகத்தின் மீது அபாண்டமாக இப்படி ஓர் அவதூறு பரப்பிய சம்பந்தப்பட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களின் ஆலோசனை பெற்றேன். அதன் பிறகு வழக்குத் தொடுத்தேன்.

ஜொகூர் பாரு செக்‌ஷன் நீதிமன்றம் 2019 ஜூலை 10ஆம் தேதி நடைபெற்ற இவ்வழக்கில் எந்த ஆதாரமும் இல்லாததால் பாதிக்கப்பட்ட முத்து உணவகத்திற்கு 100,000 மலேசிய ரிங்கிட் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அதோடு வழக்கு செலவுத்தொகை 10,000 ரிங்கிட்டையும் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தீர்ப்பை எதிர்த்து ரேமன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதிலும் சரியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால் இழப்பீட்டுத் தொகை நிலைநிறுத்தப்பட்டது செலவுத் தொகையாக 3000 வரை செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

Exit mobile version