ஈப்போ | பிப்பரவரி 25:-
சமீப காலமாக சர்ச்சையை ஏற்பாடுத்தியுள்ள தமிழ்மொழி பாடநூலில் இல்லாதத் தகவலைத் திரித்து சமூக ஊடகங்களில் பரப்பியத் தரப்புக்கு எதிராக பேரா தமிழர் முன்னேற்ற மேம்பாட்டு சங்கத்தின் துணைத் தலைவர் சுப்ரமணியம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
தமிழ்ப்பள்ளியின் ஆறாம் ஆண்டு தமிழ் மொழிப் பாட நூலில் மொழிக்குப் பாடாற்றியவர்களின் கட்டுரையில் தந்தை பெரியார், வீரமாமுனிவர் ஆகியோரின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்தப் பாடத்தின் வழி தொடர்பே இல்லாதத் திராவிடக் கருத்துகளைத் தமிழ்ப்பள்ளியில் கற்பிக்கிறார்கள் எனத் தமிழ்ப்பள்ளிக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் கலங்கம் விளைவிக்கும் நோக்கில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மேலும், அந்தப் பாட நூலுக்குத் தொடர்பே இல்லாத சமயங்களை தந்தை பெரியார் மட்டம் தட்டுவதுபோல இருக்கும் படங்களை இணைத்து பொய்ச் செய்திகளும் பகிரப்பட்டு வருகிறது. இந்தச் செயலைத் தடுக்கும் நோக்கில் தம்பூன் காவல் நிலையத்தில் சுப்ரமணியம் புகார் அளித்துள்ளார்.
அந்தப் பாடத்தின் வழியாக இந்துக்களை மதம் மாற்றம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அது போன்ற செயல்பாடுகளுக்கு உள்ளூர் தலைவர்கள் துணை போகிறார்கள் எனும் அவதூறும் கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்தச் செயலைக் கண்டிக்கும் நோக்கில் காவல்துறை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு நிலவரத்தில் தனித் தமிழ் இயக்கத்தின் முன்னோடியான மறைமலை அடிகளாரையும் அதே தமிழ்மொழிப் பாட நூலைத் தயாரித்த நிறுவனத்தையும் தகாதச் சொற்களால் திட்டிய வாட்ஸ்ஆப் குரல் பதிவும் மிக வைரலாகப் பரவி வருகிறது.
9 நிமிடம் 40 வினாடிகள் நீளம் கொண்ட அந்தக் குரல் பதிவில், ஆங்கிலேயரின் கைக்கூலி என மறைமலை அடிகளாரை ஒரு பெண்மணி பேசுவதாக இருந்தது. மேலும், தமிழ்மொழி பாடநூல் தயாரிப்பு நிறுவனத்தை இந்து எதிர்ப்பாளர் எனக் கூறுவதும் அந்த நூலை கற்பிக்கும் / ஆதரிக்கும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களைப் பொறுப்பற்றவர்களாகவும் அந்தக் குரல் பதிவில் சித்தரித்துப் பகிரப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் ஈப்போ மாவட்டக் காவல்துறை நிலையத்தில் குறிஞ்சித்திட்டுத் தமிழ்க்கழகத்தின் தலைவர் பிரபு புகார் அளித்துள்ளார்.
பிற்காலத்தில் முசுலிம், கிருத்துவ சமயத் தலைவர்கள் அந்த நூலில் இணைக்கப்படலாம். அதனால் பெரும் பிரச்சனை எதிர்காலத்தில் வரலாம் என இல்லாதப் பிரச்சனையை மக்க்களிடம் தூண்டி விட்டு ஒற்றுமையைச் சீர்குலைப்பதாகவும் அந்தக் குரல் பதிவு அமைந்துள்ளது என பிரபு குறிப்பிட்டார்.
இது போன்ற சமூகப் புல்லுருவிகளின் செயல்பாடுகளை உடனடியாகத் தடுத்தாக வேண்டும். ஆகையால், இவ்விவகாரம் குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது காவல்துறையின் பார்வைக்கு இவ்விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் இது தொடர்பான எந்தத் தகவலையும் பகிர வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
–

