கோலாலம்பூர் | பிப்பரவரி 26 :-
முதலில் மதிப்பிற்குரிய முனைவர் சிவகுமார் எழுதிய குறுஆய்வுக் கட்டுரைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஆய்வுக் கட்டுரை போன்ற படைப்புகள் இன்றைய நம் தமிழ்ச் சமூகத்திற்குத் தேவை. இத்தகைய கட்டுரைகள் நல்ல கருத்தாடல்களைத் தோற்றுவிக்கும்; கருத்துப் பரிமாற்றத்திற்கு வித்திடும்; சமூகத்தின் தெளிவுக்கும் விழிப்புணர்விற்கும் வழிவகுக்கும்; இத்தகைய சமூகத் தெளிவு நம் தமிழ்ச் சமூக்கத்தை இணைக்கும்.
எனவே, இக்கட்டுரையை முனைவர் சிவகுமாருடனான ஒரு கருத்துப் பகிர்வாகவே கருதும்படி தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றேன்.
முனைவர் சிவகுமார் கல்வியாளர் எனும் வகையில் ஆய்வுக் கட்டுரையைப் படைத்துள்ளார். அவர் கட்டுரையில் மொழி, இன, மத/சமய அலசல் தெரிகின்றது. இவ்வலசலின் பின்புலமாக அவரின் சார்புநிலையை அறிய முடிகின்றது. அவற்றைப் பேணிக் காக்க வேண்டும் எனும் முனைப்பும் துடிப்பும் தெரிகின்றது. இதே முனைப்பும் துடிப்பும் காப்பகத்திற்கும் உண்டு என்பதனை முதலில் தெளிவுபடுத்த விழைகின்றேன்.
அறிவுசால் ஆய்வும் சில வேளைகளில் தடம் மாறிவிடுவதுண்டு. இதற்குச் சில கரணிகள் உண்டு. அத்தகைய கரணிகளுக்கு முனைவர் சிவகுமாரின் படைப்பும் இலக்காகி உள்ளதைக் கட்டுரையை ஆழ்ந்து படிப்பவர்களால் தெளிவாகக் காண முடியும். அவற்றுள் சில:
அவர் சில அனுமானங்களைத் தாமே செய்து கொண்டு, இக்கட்டுரையைப் படைத்துள்ளார் எனத் தெரிகின்றது. அவற்றுள் சில:
1. (பொங்கல்) சமயம் சார்ந்த விழாவன்று. (பக்கம் 10). தொடக்கக் காலத்தில் இருந்தே பொங்கல் சமயம் சார்ந்த வழக்கமாக இருக்கவில்லை என்பதனால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதனைத் தெளிவாக உணரலாம். இதனை உணர படைப்பினை ஒட்டு மொத்தமாக முழுநிலை நோக்கில் பார்க்க வேண்டும். ஓரிரு வாக்கியங்களை மட்டும் தனித்து எடுத்து வைத்துக் கொண்டு முடிவு செய்தல் தவறான ஓர் அனுமானமாய்ப் போகும்.
2. ஒரு பத்தியை வாசிக்கின்றபோது, அப்பத்தியின் உள்ளடக்கத்தை முழுமையாக நோக்க வேண்டும் என்பது மொழி மரபு. பக்கம் 10இல் இடம்பெற்றுள்ள பத்தியை நோக்குவோம்:
அன்று தொட்டு (பழந்தமிழர் மரபில்) இன்று வரையில் பொங்கல் திருவிழா சமூகம் சார்ந்த பண்பாட்டு விழாவாகவே இருந்து வருகின்றது. அது சமயம் சார்ந்த விழாவன்று. பொங்கல் திருநாளைச் சமயத் திருவிழாவாகப் பார்ப்பது மிகத் தவறு. இது முற்றிலும் பண்பாட்டுத் திருவிழா என்பதை யாராலும் மறுக்க இயலாது. தமிழரின் பண்பாட்டில் ஊன்றி நிற்கும் பொதுமை உணர்வையும் அறிவுப் பண்பாடுகளையும் வெளிப்படுத்தும் விழாவாக அமைவதே பொங்கல் திருநாள். இது, தமிழர்கள் போற்றும் அறத்தின் பெருமையைப் பறைசாற்றும் பண்பாட்டுப் பெருவிழாவாகும்.
இப்பத்தியின் கரு வாக்கியமே, அதாவது, முதன்மை வாக்கியமே ‘…சமூகம் சார்ந்த பண்பாட்டு விழாவாகவே….’ எனத் தொடங்குகின்றது. பொங்கல், சமூகம், பண்பாடு சார்ந்தது என்ற கருத்தை மையப்படுத்தியே, சமயம் சாராதது எனவும் தமிழரின் பொதுமை உணர்வு, அறிவுப் பண்பாடு, அறத்தின் பெருமை ஆகியவற்றைப் போற்றுவது என்ற துணைக்கருத்துகளைக் கொண்டு விவரிக்கப்பட்டுள்ளது.
பத்தியை முழுமையாகவும் ஒட்டுமொத்தமாகவும் பார்க்கின், பண்பாட்டுப் பின்னணியில் ஒரு பண்பாட்டு விழாவாக பொங்கல் முகிழ்த்தது என்பதும், அதற்குச் சமயத் தொடர்பில்லை எனக் கூறப்பட்டது என்பதும் தெளிவாக விளங்கும்.
ஆகவே, பொங்கல் திருவிழாவிற்கு மட்டுமே சமயத் தொடர்பு இல்லை எனக் கூறப்பட்டதே ஒழிய, தமிழுக்கும், தமிழருக்கும் சமயத்திற்கும் தொடர்பில்லை என எங்கும் கூறப்படவில்லை.
அவ்வாறு எங்கேனும் கையேட்டில் கூறப்பட்டிருந்தது என்பதனைச் சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்கின்றோம். சொல்லப்படாத கருத்தை இட்டுக்கட்டிக் கூறி பொல்லாப் பழியைச் சுமத்தாதீர்.
3. சமயத் தொடர்பில்லாதது எனும் ஒரு கருத்தை வைத்துக் கொண்டு, கையேட்டின் ஆக்க முயற்சியில் தொடர்புடைய யாவரும், இறை மறுப்பாளர்கள் என்று முனைவர் சொல்ல வருவது முறையன்று. பொங்கல் கையேட்டின் ஆக்கத்தில் ஈடுபட்ட அனைவரும் சமய (இந்து) எதிர்ப்பாளர்கள் என்ற அனுமானம் கட்டுரையின் பல இடங்களிலே விரவி தொனிப்பதைக் காண முடிகின்றது. இக்கருத்து முற்றிலும் தவறு; கண்டிக்கப்பட வேண்டியது.
காப்பகத்தில் எல்லோரும் இறை நெறியாளர்கள். சிவவழிபாடு, முருக வழிபாடு, தாயுமானவர் மற்றும் வள்ளலார் பின்பற்றாளர்கள் எனப் பல தரப்பினரும் இருக்கின்றனர் என்பதை இங்குத் தெளிவுபடுத்த விழைன்றேன். அனைவரும் நெறியாளர்கள்; பண்பாளர்கள். சமயமும் தமிழும் எம் இரு விழிகள். இதில் எவருக்கும் ஐயம் வேண்டாம்.
4. `தமிழர் இனமா? தமிழர் சமயமா? என்ற இரண்டு கேள்விகளைத் தாங்களே உள்முகமாக உருவாக்கிக் கொண்டு, `இனத்தை முதன்மை படுத்த, தமிழர் இனமே எங்களுக்குத் தேவை, தமிழர் ஏற்கும் சமயம் தேவையில்லை,’ என்ற தங்களின் தனிப்பட்ட கொள்கையை இதில் புகுத்த முயன்றுள்ளீர்கள். முனைவர் அவர்களே, இது காப்பகத்தார் ஏற்படுத்திக் கொண்ட அல்லது தங்களின் கூற்றின்படி ‘…உள்முகமாக உருவாக்கிக் கொண்ட ஒன்றல்ல. இது தாங்களே தவறாக உருவாக்கி வெளிபடுத்தி இருக்கும் முற்றிலும் பிழையான அனுமானங்களுள் ஒன்று என்பதனைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். சமயம், தமிழ்மொழி ஆகியன சார்ந்த எங்களின் நிலைப்பாடு என்னவென்பது மேலே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
5. காப்பகத்தார் சமய மறுப்பாளர்கள் எனும் தவறான புரிதலில், சமயம், இறைமை, அறநெறி போன்றவற்றில் நீண்ட நெடிய விளக்கங்களை அள்ளித் தெளித்துள்ளீர்கள் (….தமிழர் இன பண்பாடும் (மரபும் ) , சமயமும் உடலும் உயிரும் போன்றது, போன்று). பாராட்டுகள். எங்களுக்கும் இவற்றுள் உடன்பாடே. மறுப்பேதும் இல்லை. இவற்றுக்கு எதிராகக் கையேட்டில் எங்கேனும் குறிப்புகள் உள்ளனவா? சொல்லாத ஒன்றுக்கு ஏன் இப்படிப்பட்ட விரிவாய்வு? பொங்கல் நிகழ்வில் பண்பாட்டுத் தாக்கம் இருக்கும் அளவிற்குச் சமயப் படர்ச்சி இல்லையே என்றே சான்றுகளின் அடிப்படையில் கையேட்டில் எழுத்தப்பட்டுள்ளது.
பிற்சேர்க்கையாக வந்தமைந்த சமயத் தாக்கங்கள் தமிழரின் வாழ்வியல் கூறுகளிலும் பண்பாட்டுக் கூறுகளிலும் பின்னிக் கலந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அத்கைய பழக்கங்களுள் சில பின்னாளில் கலந்திருப்பினும், இன்றும் பொங்கல் விழா தன்னுடைய பண்பாட்டு வேரினை இழந்துவிடவில்லை எனக் கூறலாம். எனவேதான், தமிழ் நாட்டில் மட்டுமன்றி உலகமெங்கும் வாழும் பல சமயம் சார்ந்த தமிழரும் பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர்.
6. மதம் மற்றும் சமயம் ஆகிய இரண்டனுக்கும் நுண்ணிய வேறுபாடுகளை முனைவர் சிவகுமார் விளக்கியுள்ளார். இது எங்களுக்கும் உடன்பாடே. எப்பொருளாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. ஐயன் வள்ளுவன் சொன்னது. அதுவும் கல்வியாளர்களுக்கும், ஒன்றன் உண்மை தன்மையை அலசி ஆராய விழைவோருக்கும் மிகவும் வேண்டற்பாலது. இவ்வாறே மத, சமய புரிதலையும் தெளிதல் வேண்டும். இன்றைய வாழ்க்கை நடைமுறையில், மத, சமய இருநிலைக் கோட்பாடுகள் மறைந்தோ அல்லது மூழ்கடிக்கப்பட்டோ கிடக்கின்றன. எல்லா மதங்களும் சமயங்களும் இறைவனை அடைதலையே தங்கள் உயரிய, இறுதி இலக்காகக் கொண்டுள்ளன என்பதனை மறுக்க இயலுமா? உங்களின் கூற்றுப்படி ‘சமயம் என்ற தமிழ் கலைச்சொல் இறைவனின் திருவருளில் சமைவது,’ என்பதில் எங்களுக்கும் உடன்பாடே.
பொங்கல் விழா ஆன்மா பக்குவப்பட்டு, இறையை அடைய தன்னைத் தகுதிப் படுத்தும் முக்கரணவொழுக்கம் என்பதனைக் காட்டிலும், உழைப்பின் உன்னதத்தையும் அதன் விளைவையும் போற்றி நிற்கும் விழா என்பதே மிகப் பொருந்தும். விளைச்சலுக்குத் துணை நின்ற கதிரவன், உழைப்பை ஈன்ற மாடு, உழவிற்கு உதவி நின்ற உபகரணங்கள், விளைச்சல் போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக இருந்துள்ளது என்பதற்குச் சான்றுகள் பல உள. கையேட்டிலும் சங்க இலக்கியப் பாடல் வரிகள் சான்றாக வழங்கப்பட்டுள்ளன.
தமிழர்கள் ஆதியில் இயற்கையையும், தங்களின் முன்னோர் மற்றும் ஊர் சார்ந்த காவல் தெய்வம் எனக் கருதப்பட்டோரையே வழிப்பட்டுள்ளனர். இது சமயம் சார்ந்து அமைந்திருக்கவில்லை. அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி, பழந்தமிழர், மதம் சாரா இயற்கை வழிபாட்டினை மேற்கொண்டிருந்தனர் என்பதனை மெய்ப்பித்துள்ளது. இதன்வழி, தமிழரின் தொடக்கக்கால மெய்யியல் இயற்கை சார்ந்த பொதுமையை அடிப்படையாகக் கொண்டது என்பதனை உய்த்துணரலாம்; அது மதமோ, சமயமோ சார்ந்ததல்ல.
இந்த அடிப்படையிலேயே, பொங்கல் இயற்கையைப் போற்றி நன்றி கூறும் ஒரு பொதுமை விழாவாக தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் கொண்டாடப்பட்டு வந்தது; வருகின்றது.
இயற்கையைப் போற்றுவதற்கும், நன்றி கூறுவதற்கும் சமய வழிபாட்டிற்கும் வேறுப்பாடுகள் உள. ஆதித் தமிழரிடத்தே, சூரிய வழிபாடு, பசு, பூமி போன்றவற்றை வழிபடும் மரபு இருந்ததாகத் தெரியவில்லை.
பொங்கலுக்கே உரிய பண்பாட்டு வழக்காகவே அவை பார்க்கப்பட்டுள்ளன என்பதற்கான சான்றுகளே உள. ஆகவேதான், பொங்கல், ‘இயற்கையோடு இயைந்து இறைமையின் பேருண்மையை உணர்த்துவதோடு தமிழரின் தொன்மை வழிபாட்டு முறையைமையையும் பறைசாற்றுகின்றது’ என்று எடுத்துரைக்கப்பட்டது.
7. `நமது சமயம் உயர் ஏரண ( Higher Order Logics) அறிவியல் மெய்யறிவு,’ என்பதனைக் காப்பகம் எப்போதாவது மறுத்துள்ளதா? மேலும், தங்களின் இறைத்தொண்டு பற்றிய விவரிப்போடு முரண்படும் கருத்து, கையேட்டில் எங்குள்ளது? அவ்வாறு இருப்பது போன்ம்று வாதிடல் தவறான அனுமானம் அல்லவா?
அறவழி நின்று இயற்கையைப் போற்றி நன்றி கூறும் பண்பாட்டு வழக்கு என்பதனால், சமயப் புறக்கணிப்பு, என்பதும், சமயம் சார் அறிவியல் மெய்யறிவிற்கு எதிரானது எனக் கொள்வதும் எவ்வகை உயர் ஏரண நிலை? வள்ளுவ இறை கொள்கையைக் கையேடு புறந்தள்ளியுள்ளது எனும் அனுமானம் முற்றிலும் தவறல்லவா? கையேட்டில் கறிப்பிடப்பட்ட குறள் 322 தமிழர் பண்பாடு சார்ந்த பார்வை அல்லவா; நெறி அல்லவா?
8. ‘தமிழர் என்பவர் சமயம் சாரா மரபினரா ?’ இதுவும் கையேட்டோடு தொடர்பில்லாத மற்றுமொரு தவறான பொதுமையாக்கப்பட்ட அனுமானம். தமிழர் சமயம் சாரா மரபினர் என்று கையேட்டில் எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது? பொங்கல், பண்பாடு சார்ந்த விழா என்பதனால் மட்டும் அவர்கள் சமயம் சாரா மரபினர் என்று கூறுவதாகச் சுயமாக அர்த்தப்படுத்திக் கொள்வது எந்த உயர்நிலை ஏரணம் ( Higher Order Logics) என்பது விளங்கவில்லை.
9. கார்த்திகை திருநாள், தை நீராட்டு விழா, திருவோண(ம்) விழா போன்ற பன்னிரண்டு விழாக்களைக் குறிப்பிட்டு இவையெல்லாம் சமயம் சார்ந்த விழாக்கள் என்று கூறியுள்ளீர்கள். யார் மறுத்தது? கையேடு எங்கு மறுத்துள்ளது? இவ்விழாக்கள் ஏதேனும் ஒரு தெய்வத்தை முன்னிலைப்படுத்திக் கொண்டாடப்படுகின்றன. ஆனால், பொங்கல் எந்தத் தெய்வத்தை முன்னிலைப்படுத்திக் கொண்டாடப்படுகின்றது? சூரியனையும், மண்ணையும் சமயம் சார்ந்த தெய்வங்களாகச் சித்திரக்க முயன்றுள்ளீர்கள்.
‘இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்’ (குறள் 1041)
எனும் குறளுக்குப் பரிமேலழகர். தம் உரையில், `உழுதல் முதலிய செய்வார் யாவர்க்கும் செல்வம் கொடுத்து வருகின்றமையாள் `நல்லாள்’ எனப் பெண்ணாக நிலத்தை உருவகப்படுத்தி மொழிந்திருக்கின்றார் திருவள்ளுவ,’ எனச் சுட்டிக்காட்டுகின்றார். மண்ணின் இப்பயன் அறியாது சோம்பி இருப்போரைக் கண்டாள் மண்மகள் நகைப்பாள் என்பதே வள்ளுவர் கருத்து. ‘நல்லாள்’ என்பதற்குக் கழகத் தமிழ் அகராதி, பெண், மாது என்பன போன்ற பொருள் கொடுத்துள்ளது. நல்லாள் என்றால் நல்ல மங்கை என்றே பொருள் கொள்ளலாம்.
ஆனால், முனைவர் சிவக்குமார், தம் கருத்தை வள்ளுவர் மீதேற்றி, நல்லாளைத் திருமகளாகச் சித்திரித்துச் சமயச் சாயம் பூச முயற்சிப்பது போல் தோன்றுகின்றது (… தங்களின் உழவுக்கு ஆதாரமாக இருக்கும் வளம் தரும் நிலமகளை (மண்ணை) வளம் தரும் திருமகள் அம்மையின் வடிவாக, பெரும் நல்லாளாகக் கண்டு வழிபடுவது உழவர்களுக்கே உள்ள மரபு).
தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்து இயற்கையைப் போற்றியுள்ளனர்; அதன் பிரதிபலிப்பே பொங்கல் திருநாள். திரு என்பதனால் மட்டிலும் சமயத் தொடர்பு ஆகிவிடாது. சிறப்புக்குரிய யாவற்றிற்குமே தமிழர் `திரு’ எனும் முன்னொட்டைப் பயபடுத்தி உள்ளனர்.
10. கலித்தொகையில், ‘இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல..,’ எனத் தொடங்கும் பாடலில், `ஞாயிற்றுப் புத்தேள் மகன்?’ (கலி.. 108/13) எனும் இவ்வரி இடம்பெற்றுள்ளது. இதில், ‘தன் தலைவனை விண்ணுலகத்தில் இருக்கும் ஞாயிற்றின் மைந்தன் என அழைப்பர்,’ என்று குறிப்பிடுகிறாள் தலைவி. இதனால் ஞாயிறைத் தெய்வம் எனப் பொருள் பெயர்ப்பது எவ்வகையில் பொருந்தும்? இதனைப் போன்றததுதான் அவரின் பிற பிழையான வாதங்களும்.
இப்படி மண்ணை பூமாதேவி எனக்கூறும் வழக்கும், சூரியனைச் சூரிய பகவான் எனும் வழக்கும் பின்னர் வந்திருந்தாலும், இயற்கையை இவற்றோடெல்லாம் முடிச்சுப் போட முயலுதல் ஏற்புடையதாகத் தோன்றவில்லை. அப்படியேயாயினும், இந்த நம்பிக்கைகளைக் கையேடு எங்கு மறுத்துள்ளது?
11. ‘பொங்கல் திருநாளுக்கென்றே, ஆழமான சமய, பண்பாட்டுச் செய்முறைகளும் வழி முறைகளும் உள்ளன’, என்பதில் பண்பாடே தடம் பதித்து நிற்கின்றது. கையேட்டின் 12ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, இல்லத்தைத் துப்புரவு செய்து தூய்மைப்படுத்துதல், கரும்பு கட்டுதல், மாவிலை, தோரணம் கட்டுதல், வாழைமரங்கள் நடுதல் மற்றும் கோலமிடுதல் யாவும் பண்பாடின் அடையாளங்கள் அல்லவா? சமயச் சார்பினை விடுத்து, நடுநிலையுடன் சான்றுகளின் அடிப்படையில் நோக்குக.
12. பண்பாட்டு நிகழ்வை, விழாவைப் பண்பாட்டு விழாதான் என்பதனால், ‘இம்மரபுகள் யாவும் சீர்குலைந்து பாழ்பட்டுப் போகும்…’ என்பது தேவையற்ற அச்சம். சீர்குலைவிற்கான கரணியங்களைக் குமுகாய, சமய நல விரும்பும் நாம் அனைவரும் உள்நோக்கி ஆய்தல் வேண்டும். அதைவிடுத்து, நிழல் போர் நடத்த முயலக்கூடாது. தகவல் தொழில்நுட்பக் காலச் சூழலில் நம் இளையோரிடமும் சமயத்தாரிடமும் வெளிப்படையான அறிதலையும், புரிதலையும் ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய முயற்சியின் முன்னெடுப்பே இக்கையேடு.
13. தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை இப்போது தோன்றியதல்ல. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே எழுந்த சிக்கல். அப்போது, 1921இல், அன்றையத் தமிழறிஞர் பெருமக்கள், 500உம் மேற்பட்டோர் கூடி, தமிழருக்கான புத்தாண்டு பிறப்பு தை முதல்நாளே என முடிவெடுத்தனர். அவர்களுள், தமிழ்க்கடல் மறைமலையடிகள், தமிழ்த் தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்ரமணியம் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் நா. மு. வேங்கடசாமி நாடார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ. பெ. விசுவநாதம், பேராசிரியர் சா. நமச்சிவாயனார் மற்றும் உ.வே. சாமிநாத ஐயர் போன்றோரும் அடங்குவர். இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை எனக் கருதுகின்றேன்.
இதற்காகக் காப்பகத்தார் சித்திரைப் புத்தாண்டிற்கு எதிரானவர்கள் எனத் தவறான அனுமானத்தின் அடிப்படையில் தவறான கருத்தேற்றத்தை உருவாக்காதீர். இவ்வகையில் எதுவும் கையேட்டில் குறிப்பிடப்பவில்லை.
14. இறுதியாக, மொழி சார்ந்தே இனம் பிறக்கும். தமிழ்மொழிக்குச் சொந்தக்காரர்கள் தமிழர். `மொழியினம்’ எனும் வழக்கு இதனால்தான் வந்தது. அதே வேளையில், ஒரே இனத்தவர் ஒரே சமயத்தவராக இருப்பதில்லை; ஒரே சமயத்தவர் ஒரே இனத்தவராகவும் இருப்பதில்லை. சில சூழல்களில் சமயத்தால் வேறுபாடு இருப்பினும், சில பண்பாட்டுக் கூறுகள் ஓர் இனத்தாரைப் பிணைத்திருக்கும். அத்தகையப் பண்பாட்டுக் கூறு பொங்கல் திருநாள். எனவே தான், பொங்கலை உலகெங்கும் வாழும் பல் சமயத் தமிழர்களும் கொண்டாடி வருகின்றனர். இன்று, தமிழர் மட்டுமன்றி பிறரும் கொண்டாடி மகிழ்கின்றனர். எவர், எங்கு கொண்டாடுகின்றனர் என்பதைத் தமிழர் சமூகம் கட்டுப்படுத்தியதில்லை.
பொது முடிப்பு
`நல்லத் தமிழ்மொழியைப் பயன்படுத்துவோம்,’ எனக் கூறுவோரை சமய நம்பிக்கை, இறை நம்பிக்கையற்றவர்கள் என வகைப்படுத்தி வசைபாடும் கூட்டம் ஒன்று புறப்பட்டுள்ளது. அதனிடம் விழிப்பாய் இருப்பீர் தமிழர்களே.
தமிழர்கள் பின்னோக்கிப் பார்த்து பிளவுற்றுத் தங்களின் ஆற்றலைய்ம் அறிவினையும் வீணடிப்பதைத் தவிர்த்து, முன்னோக்கிப் பார்ப்பதில் தங்களின் ஆற்றலையு அறிவினையும் ஈடுபடுத்த வேண்டும். எல்லாச் சமூகங்களிலும் சிந்தனை முரண்களும் கருத்து முரண்களும் நிலவியே வரும். ஆனால், இன நலன், மொழி நலன் மற்றும் சமய நலன் கருதி வேறுபாட்டினை ஏற்போம்; பிரிவினையைத் தவிர்ப்போம்; அவரவர் வழியில் அவரவர் பணிப்போம்; ஆக்கப் பணி புரிவோம். சமுதாயம் கணிக்கட்டும்.
கருத்து மோதலைக் காணிக்கையாக்கி, பிழைப்புத் தேடித் தலைமை நாடி போர் முரசு கொட்டுவர்; வீழ்ந்துவிடாதீர்.
இந்த விளக்கத்தினை வாசிப்போர் இதன் கருத்துகளையும் சான்றுகளையும் நடுநிலையோடு சீர்தூக்கிப் பார்த்திடுக. உவத்தல் காய்தல் இன்றி எது நம் இனம் காக்கும் எனச் சிந்தித்து முடிவு செய்க. காப்பகத்தின் துணைதலைவர் எனும் வகையில், அவருக்கு மறுமொழி அளிக்க வேண்டியது என் கடமை. தெளிவுபடுத்தும் இவ்வாய்ப்பை நல்கிய முனைவர் சிவகுமார் அவர்களுக்கு எங்களின் கனிந்த நன்றி.

