Site icon அநேகன்

தேசம் எல்லாம் விளக்கிய தென்திசை ஞாலம் அளந்த மேன்மைத் தமிழ் – (தொடர் 3) இர.திருச்செல்வம் (மலேசியத் தமிழ்த் தேசியப் பேரவை

 

தனித்தமிழ் முன்னெடுப்பு யாரால் ஏன் வந்ததென்று தெரியுமா?

இதோ கொஞ்சம் வரலாற்றுத் துளிப்புகள்!

பரஞ்சோதி முனிவர் அருளிச்செய்த திருவிளையாடல் புராணம்

[தனக்கு தெய்விகமும் உயர்வும் கற்பித்துக்கொண்டு செருக்கிய ஆரிய ஆணவத்துக்குக்

திருவிளையாடல் புராணம் கொடுத்த சாட்டையடி.]

                கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து

                பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த-இப் பசுந்தமிழ் ஏனை

                மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்

                எண்ணிடைபடக் கிடந்ததாய் எண்ணவும் படுமோ?

தொண்டர் நாதனை தூதிடை விடுத்ததும்; முதலை

உண்ட பாலனை அழைத்ததும்; எலும்புபெண் உருவாக்

கண்ட தும்;மறைக் கதவினைத் திறந்ததும்; கன்னித்

தண்ட மிழ்ச்சொலோ? மறுபுலச் சொற்களோ சாற்றீர்?

குறிப்பு:- [இந்த முழுமைத் தமிழாண்மை வீறு இன்றைய சமயத் தமிழர்க்கு இல்லை. அதுதான் அடுத்தவனுக்கெல்லாம் இளப்பமாய் இருக்கிறது. பிறப்பால் மட்டும் தமிழனாய் இருப்பது போதுமா? எல்லாத் துறையிலும் சிறப்பாலும் தமிழராய் இருக்க வேண்டாமா?]

முதலில் காஞ்சிபுராணம் நல்லபடியாக எடுத்துச்சொன்னது

அதை அவர்கள் மதித்துக் கேட்டுக்கொள்ளவில்லை.

                வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி; அதற்கிணையாத்

                தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம் தொழுதேத்தும்

                குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்று விடைபாகர்;

                கடல்வரைப்பில் இதன்பெருமை யாவரே கணித்தறிவார்!

                இருமொழிக்கும் கண்ணுதலார் முதல்குரவர், இயல்வாய்ப்ப

                இருமொழியும் வழிப்படுத்தார்! முனிவேந்தர் இசைபரப்பும்

                இருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றால்,இவ்

                விருமொழியும் நிகர்என்னும் இதற்குஐயம் உளதேயோ?

சிவப்பிரகாசர் ஆரிய ஆணவ நெஞ்சாங்குலையில்

நேராகக் கைவைத்து உலுக்கினார்

விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கண்

காரணன் உரையெனும் ஆரண மொழியோ;

ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்

மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ;

யாதோ சிறந்தது என்குவீர் ஆயின்,

வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி

நெஞ்சநெக்கு உருகி நிற்பவர்க் காண்கிலேம்!

திருவா சகம்இங்கு ஒருகால் ஓதிற்

கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்

தொடுமணற் கேணியின் சுரந்துநீர் பாய

மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப்பு எய்தி

அன்பர் ஆகுநர் அன்றி

மன்பதை உலகின் மற்றையர் இலரே!

இவர்களெல்லாம் என்ன திராவிடக் கழகத்தில் பயிற்சிபெற்று வந்தவர்களா? இவர்கள் வாழ்ந்த காலத்தில் திராவிடர் கழகம் – அதனுடைய நாத்திகம் என்பவை இருந்தனவா? இறைவனை மட்டும் பாடிப் போற்றிப் போகவேண்டியதுதானே? ஏன் அதன் நடுவே இப்படி ஒரே இறைநெறிக் கூடாரத்தில் இருந்துகொண்டு மொழிகளின் உயர்வுதாழ்வு குறித்து ஒற்றுமைவேற்றுமை ஒப்பீடுகள் – உரசிப் பார்ப்புகள் –  எதிர்ப்புகள் செய்யப்பட்டுள்ளன? இது தமிழராகப் பிறந்துள்ளவர்களுக்கே தெரியாது. அப்புறம் எப்படித் தமிழர் அல்லாத சொந்த வாழ்வியல் மரபுநெறி இல்லாதவர்களுக்குப் புரியும்?

அன்றியும் தமிழ்நூற்கு அளவிலை, அவற்றுள்

ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ?

அன்றியும் ஐந்தெழுத் தால்ஒரு பாடையென்று

அறையவும் நாணுவர் அறிவுடை யோரே!

ஆகையால், யானும் அதுவே அறிக.

பாகம் 1 இணைப்பு : http://www.anegun.com/?p=44914

பாகம் 2 இணைபு : https://www.anegun.com/?p=44943

Exit mobile version