கோலாலம்பூர் | 21/8/2021 :-
இரண்டாவது #KeluarLawan பேரணி இரத்து செய்யப்பட்ட போதிலும் கோலாலம்பூரில் உள்ள 88 சாலைகளை காவல்துறை மூடியதால் கடுமையானப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், RapidKL நிறுவனம் கோலாலம்பூரில் இருக்கும் அதன் 34 தொடர்வண்டி நிலையங்களை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரைத் தற்காலிகமாக மூடும் நடவடிக்கை மேலும் நிலமையை மோசமடைந்தது.
மெர்டேக்கா சதுக்கத்தை நோக்கிச் செல்லும் சாலைகள் யாவும் கடுமையானப் போக்குவரத்து நெரிசலுக்குள்ளானது GPS Waze செயலியில் காண்பிக்கப்பட்டது.
இது குறித்து பல சாலைப் பயனர்கள் தங்களின் அதிருப்தியை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் இன்னும் சிலர் கோவுட்-19 தடுப்பூசி நேர்முகச் சந்திப்புக்குத் தாமதமாகச் செல்லும் சூழல் ஏற்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் உள்ளத் தடுப்பூசி நிலையத்தில் பணிபுரியும் ஒரு பணியாளருக்குப் பல அழைப்புகள் வந்ததாகவும் தாமதத்திற்கு மூடப்பட்ட சாலைகளால் ஏற்பட்டுள்ள நெரிசல் காரணமாகவும் தெரிவித்ததாகக் குறிப்பிடுகிறார்.
டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட மற்றொரு பயனர், கடுமையான சாலை நெரிசலால் கடந்த இரண்டும் மணி நேரமாக கோலாலம்பூரைச் சுற்றிக் கொண்டும் இருப்பதாகவும் இன்னும் தாம் கேஎல்சிசி தடுப்பூசி மையத்திற்குச் செல்லத் தாமதமாகி விட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
மெர்டெக்கா சதுக்கத்தின் அருகில் இருக்கும் தமது வீட்டுற்குச் செல்ல முடியாமல் கடந்த மூன்று மணி நேரமாக சிக்கிக் கொண்டிருப்பதாக லுக்மான் குறிப்பிட்டார்.
பிரதமர் பதவியில் இருந்து முகிதீன் விலகியதைத் தொடர்ந்து இரண்டாவது #KeluarLawan பேரணி இரத்து செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்தனர்.
முதல் பேரணி கடந்த மாதம் 31 ஆம் நாள் நடத்தப்பட்டது. அதில் ஏறத்தாழ 400 பேர் கலந்து கொண்டனர்.
அம்னோவின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாட்டின் 9வது பிரதமராக அரண்மனையில் மாமன்னரின் முன்னிலையில் பதவி ஏற்றார்.
முன்னதாக, பேரணி இரத்து செய்யப்பட்ட பின்னரும் காவல் துறையின் இந்த நடவடிக்கை அளவுக்கு மீறதாக உள்ளது என அப்பேரணியின் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுருந்தனர்.

