லண்டன், செப்.19-
இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும் எவர்ட்டனின் தாக்குதல் ஆட்டக்காரருமான வெய்ன் ரூணிக்கு இரண்டு ஆண்டுகள் வாகனங்களை ஓட்ட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் சிக்கிய வெய்ன் ரூணிக்கு ஸ்டாக்போர்ட் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. 100 மணி நேரம் அவர் சமுதாய பணி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 31 வயதாகும் ரூணி அண்மையில் அனைத்துலக போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
அவர் 53 கோல்களுடன் அதிக கோல் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனை படைத்தவர். மொத்தம் 119 போட்டிகளில் ரூணி விளையாடியது இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் ஒரு சாதனையாகும். தனது 17-வது வயதில் 2003 ஆம் ஆண்டு வெய்ன் ரூணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் போட்டியில் ஆடினார். அப்போது இளம் வயதில் தேசிய அணியில் இடம்பெற்ற வீரர் என்பதால் உடனேயே நட்சத்திர தகுதி பெற்றார் ரூணி.
இங்கிலாந்தின் ஜாம்பவான் அணியான மென்செஸ்டர் யுனைடெட்டில் தாக்குதல் ஆட்டக்காரராக அதிக கோல் அடித்த அவர் இப்பருவத்தில் எவர்ட்டனுக்கு மாறி சென்றார்.
தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது குடும்பம், ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ள அவர், நீதிமன்ற உத்தரவின்படி தனது அறவாரியத்தின் வாயிலாக சமூக பணிகளை மேற்கொள்வேன் என தனது டுவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வெய்ன் ரூணி.
