கோலாலம்பூர், செப்.19 –
மலேசிய பூப்பந்து சங்கம் ( பி.ஏ.எம் ) நுட்ப இயக்குனர் பொறுப்பில் இருந்து மோர்டேன் புரோஸ்ட் ஹன்சன் விலகி கொண்டாலும் அந்த சங்கம் தொடர்ந்து தனது வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று தாம் நம்புவதாக இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
மோர்டேன் புரோஸ்ட் ஹன்சன் தனது பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டதை மலேசிய பூப்பந்து சங்கத் தலைவர் டத்தோ ஸ்ரீ நோர்சா சக்காரியா தம்மிடம் தெரிவித்து விட்டதாக கைரி கூறினார். மோர்டேன் புரோஸ்ட் இல்லாத நிலை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த பி.ஏ.எம் மாற்று வழி கொண்டிருக்கும் என தாம் நம்புவதாக கைரி சொன்னார்.
மோர்டேன் புரோஸ்ட் ஹன்சன் இல்லை என்றாலும், மலேசிய பூப்பந்து குழுவின் பயிற்றுனர்களின் தரத்தை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தாம் நோர்சாவை கேட்டு கொண்டதாக கைரி கூறினார்.
பயிற்றுனர்களின் தரத்தை உயர்த்துவதுடன் ஒற்றயர் ஆட்டக்காரர்களை அடையாளம் காணுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நோர்சா தம்மிடம் கூறியதாக கைரி தெரிவித்தார்.
சொந்த பிரச்சினையின் காரணமாக பி.ஏ.எம்-ம்மின் நுட்ப இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாக மோர்டேன் புரோஸ்ட் ஹன்சன் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
