கோலாலம்பூர், செப் 19-
சாதனைக்கு உடல் நலக் குறைவு ஒரு தடையில்லை என பாரா ஒலிம்பிக் போட்டியில் இரு தங்கப் பதக்கங்களை வென்று நிரூபித்துக் காட்டியுள்ளார் ஹேமலா தேவி எனி குட்டி. புக்கிட் ஜாலில் நடைபெற்ற பாரா ஆசியான் 2017இல் குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகளிலும் தங்கப்பதக்கங்களை வென்று நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.
ஜோகூர், சிகாமாட்டைச் சேர்ந்த ஹேமலா தேவி முதல் நாள் வட்டு எறிதல் எப் 12 போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். விளையாடும் போது மழையில் நனைந்ததால் அவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. கண்பார்வை குறைந்த ஹேமலா தேவி காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் மறுநாள் குண்டு எறிதல் எப்11/12 போட்டியிலும் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
மொத்தம் 634 புள்ளிகளை பெற்று ஹேமலா தேவி தங்கப் பதக்கத்தை வென்றார். 310 புள்ளிகளை பெற்று பிலிப்பைன்ஸ்சைச் சேர்ந்த ஜெனெத்தே எக்கேவெடா வெள்ளி பதக்கத்தை வென்றார். 275 புள்ளிகளை பெற்று புருணையைச் சேர்ந்த நோர் என்சன் மாசா வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான இரு வெவ்வேறு பிரிவுகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுவது சுலபமல்ல. இவ்விரு போட்டிகளிலும் அதிகமான மதிப்பெண்களை பெற்று வெற்றியடைந்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். எனக்கு கடுமையான காய்ச்சலாக இருந்தாலும் வெற்றி பெறுவதற்காகவும் நாட்டிற்கு பெருமை தேடித் தருவதற்காகவும் எனக்கு நானே ஊக்கமளித்துக் கொண்டேன் என ஹேமலா தேவி தெரிவித்தார்.
அதே வேளையில், தனது பயிற்சியாளர், பெற்றோர், நண்பர்கள் ஆகியோர் தனக்கு ஊக்குவிப்பு வழங்கியதோடு பக்கபலமாக இருந்ததாகவும் போட்டியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார். இதற்கு முன்னர், குண்டு எறிதல் போட்டியில் 30.30 மீட்டர் தூரம் வரை குண்டு எறிந்தேன்.ஆனால், இம்முறை ஆசியான் பாரா 2017இல் 32.46 தூரம் வரை குண்டு எறிந்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளேன். இது வரையில், 5 ஆசியான் பாரா ஒலிம்பிக் கலந்து கொண்டுள்ளேன்.
ஆனால், இம்முறைதான் அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றுள்ளேன் என ஹேமலா தேவி கூறினார்.
அடுத்த ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெறவிருக்கும் பாரா ஆசியான் 2018இல் நான் கலந்து கொள்வதற்கு இவ்வாண்டின் ஆசியான் பாரா போட்டி எனக்கு ஊக்குவிப்புத் தளமாக அமைந்துள்ளது என அவர் மேலும் கூறினார்.
