பார்சிலோனா, செப்.20 –
ஸ்பெயின் லா லீகா கிண்ண கால்பந்துப் போட்டியில் பார்சிலோனாவின் அதிரடி தொடர்கிறது. ஆக கடைசியாக செவ்வாய்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா 6 – 1 என்ற கோல்களில் எய்பார் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் பார்சிலோனாவின் முன்னணி நட்சத்திரம் லியோனெல் மெஸ்சி நான்கு கோல்களைப் போட்டு அதிரடி படைத்துள்ளார்.
எய்பார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பார்சிலோனா பயிற்றுனர் எர்னாஸ்டோ வல்வார்டே அதிகமான மாற்றங்களை செய்திருந்தார். ஆறு புதிய ஆட்டக்காரர்களுக்கு முதன்மை அணியில் அவர் வாய்ப்பு வழங்கி இருந்தார்.
21 ஆவது நிமிடத்தில் மெஸ்சி தனது கோல் வேட்டையைத் தொடங்கினார். முதல் பாதி ஆட்டம் முடிவடைய ஏழு நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது பவுலின்ஹோ, பார்சிலோனாவின் இரண்டாவது கோலைப் புகுத்தினார். பார்சிலோனாவின் மூன்றாவது கோலை 53 ஆவது நிமிடத்தில் டெனிஸ் சுவாரேஸ் அடித்தார்.
நான்கு நிமிடங்களுக்குப் பின்னர் எய்பாரின் ஒரே கோலை செர்ஜி என்ரீச் போட்டார். 59 ஆவது நிமிடத்தில் கிடைத்த பினால்டியை மெஸ்சி கோலாக்கியதன் வழி பார்சிலோனாவை 4 – 1 என்ற நிலையில் அடித்தார். 62 ஆவது நிமிடத்தில் தனது ஹாட்ரீக் கோலைப் போட்ட மெஸ்சி 87 ஆவது நிமிடத்தில் தனது நான்காவது கோலைப் போட்டார்.
பார்சிலோனா கிளப்புடன் மெஸ்சி இதுவரை 48 முறை ஹாட்ரீக் கோல்களைப் போட்டுள்ளார். அதேவேளையில் இந்த பருவத்தில் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் 12 கோல்களைப் போட்டிருக்கிறார்.
