லண்டன், செப்.20 –
இங்கிலாந்து லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் மூன்றாவது சுற்றில் லிவர்புல் 0 – 2 என்ற கோல்களில் லெய்செஸ்டர் சிட்டியிடம் தோல்வி கண்டதை அடுத்து நிர்வாகி ஜூர்கேன் குலோப் தனது தற்காப்பு ஆட்டக்காரர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளார் .
கடந்த நான்கு ஆட்டங்களில் லிவர்புல் வெற்றிப் பெற தவறியுள்ளது. லிவர்புல் தற்காப்பு பகுதியின் பலவீனமே இதற்கு காரணம் என நிர்வாகி ஜூர்கேன் குலோப் தெரிவித்துள்ளார். லெய்செஸ்டர் சிட்டியின் கிங் பவர் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்புல் முதல் பாதியில் சில தாக்குதல்களை முன்னெடுத்தாலும் கோல் போடுவதில் தோல்வி கண்டது.
இரண்டாம் பாதியில் லிவர்புல் தற்காப்பு பகுதியின் பலவீனம் காரணமாக லெய்செஸ்டர் சிட்டி சிஞ்சி ஒக்காசாக்கி, இஸ்லாம் சிலிமணி மூலம் இரண்டு கோல்களைப் போட்டது. இந்த பருவத்தில் இரண்டு ஆட்டங்களில் மட்டுமே லிவர்புல் எந்த ஒரு கோலையும் விடாமல் தப்பித்துள்ளது.
இதனால் லிவர்புல் நிர்வாகி குலோப் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். லிவர்புலின் தற்காப்பு பகுதி தொடர்ந்து பலவீனமாக இருந்தால் எந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெறுவது கடினம் என குலோப் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
