சென்னை, செப்.20-
தமிழ் சினிமாவில் விஷாலை ஆக்ஷன் கதாநாயகனாக உயர்த்திய சண்டைக்கோழி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. 2005 ஆம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், மீரா ஜஸ்மின் நடித்த சண்டைக்கோழி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்த படத்தின் மூலம் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன் அந்தஸ்தைப் பெற்றார். அதேவேளையில் லிங்குசாமியும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
2014 ஆம் ஆண்டில் சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கிய அஞ்சான் திரைப்படம் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது.அதேவேளையில் உலக நாயகன் கமலை வைத்து லிங்குசாமி தயாரித்து உத்தம வில்லன் படம் வணிக ரீதியாக அடி வாங்கியது.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக எந்த ஒரு படத்தையும் இயக்காமல் இருந்த லிங்குசாமி சண்டைக்கோழி 2 படத்துக்கு கதை, திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தார். மீண்டும் விஷாலுடன் கை கோர்ப்பதன் மூலம் லிங்குசாமி தனது பழைய நிலைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ராஜ்கிரண், வரலக்ஷ்மி சரத்குமார் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படம் விஷாலின் 25 ஆவது திரைப்படமாக உருவாகிறது.
