கோத்தா பாரு, செப்.20 –
கோலாலம்பூர், டத்தோ கிராமாட் டாரூல் கூரான் இத்திபாக்கியா சமயப்பள்ளியில் நடந்த தீ சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஏழு இளைஞர்களின் பெற்றோர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படாது என தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ புசி ஹரூன் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பாக வெளியாகியுள்ள வதந்திகள் அனைத்தும் வெறும் ஆருடங்கள் மட்டுமே என புசி ஹரூன் தெரிவித்தார். இதில் அவர்களின் பெற்றோர்கள் சம்பந்தப்படவில்லை என்றும் அந்த எழுவரின் நடவடிக்கை, சிறார் குற்றம் என வகைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு தரப்பும் ஆருடங்களை கூற வேண்டாம் என்று அவர் கேட்டு கொண்டார். போலீஸ் மேற்கொண்டுள்ள விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைக் குறித்து தமது தரப்பு அரசாங்க தரப்பு வழக்கறிஞர்களிடம் பரிந்துரைகளை முன் வைக்கும் என்று அவர் சொன்னார்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மாணவர்களிடம் இன்னும் வாக்குமூலம் பதிவு செய்யப்படாதது உட்பட பல்வேறு காரணங்களினால் விசாரணை முழுமைப் பெறுவதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும் என அவர் கூறினார்.
அதேவேளையில் தெனாகா நேஷனல் பெர்ஹாட், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, ரசாயண மற்றும் தடயவியல் துறையின் அறிக்கைக்காகவும் தமது தரப்பு காத்து கொண்டிருப்பதாக புசி ஹரூன் கூறினார்.
