கோலாலம்பூர், செப்.20 –
14 ஆவது பொதுத் தேர்தலுக்கான தயார்நிலை மற்றும் வியூகம், அமைப்பு சட்டத்தில் திருத்தம் மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டம் என பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் மலேசிய இந்தியர்களின் முதன்மை அரசியல் கட்சியான ம.இ.காவின் 71 ஆவது பொது பேரவை வரும் சனிக்கிழமை தொடங்கவிருக்கிறது.
14 ஆவது பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறலாம் என்ற சூழ்நிலையில் ம.இ.கா அதனை எதிர்கொள்வதற்கு தயாராக நாடு முழுவதும் உள்ள ம.இ.கா கிளைத் தலைவர்களும் உறுப்பினர்களும் தங்களின் எதிர்பார்ப்புகளை முன் வைக்கும் ஒரு களமாக இந்த பொது பேரவை அமையும் என கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ அ. சக்திவேல் தெரிவித்துள்ளார்.
1946 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட மலேசிய இந்தியர் காங்கிரஸ் ( ம.இ.கா.) இன்னமும் இந்தியர்களின் முதன்மை கட்சியாக நாட்டின் அரசியல் களத்தில் வீற்றிருக்கும் வேளையில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களையும் சந்திக்க கட்சி தயாராக இருப்பதாக சக்திவேல் தெரிவித்தார்.
கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் ம.இ.கா எதிர்கட்சிகளிடம் இழந்த தொகுதிகளை மீண்டும் மீட்டெடுக்க கட்சியின் ஒற்றுமை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இன்றைய தலைமைத்துவம் இருக்கிறது. அதனை நிரூபிக்கும் ஒரு களமாக 71 ஆவது பொது பேரவை அமையும் என சக்திவேல் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஒவ்வொரு பொது பேரவையிலும் தங்களின் தொகுதிகளில் நிலவும் பிரச்சினைகளை மட்டுமே பேசி வந்த கட்சி உறுப்பினர்கள் இம்முறை கட்சியை அடுத்த கட்டத்திற்கு இட்டு செல்லும் வகையில் அதற்குரிய பல்வேறு கருத்துகளையும் ஆலோசனைகளையும் பேராளர்கள் முன் வைக்க வேண்டும் என சக்திவேல் கேட்டு கொண்டார்.
குறிப்பாக கடந்த பொதுத் தேர்தலில் இழந்த 5 நாடாளுமன்றத் தொகுதிகளை மீட்க வேண்டிய நெருக்கடியில் கட்சி உள்ளது என்பதை பேராளர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் சொன்னார். எனவே இந்த மாநாட்டில் கட்சியை மீண்டும் அதன் பழைய பொற்காலத்துக்கு கொண்டு செல்லும் ஆக்கபூர்வமான சிந்தனைகள் உறுப்பினர்கள் முன் வைப்பார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே ம.இ.கா. கட்சியில் தொகுதி, கிளை, மாநில அளவில் அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக கட்சியின் அமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என பரவலாக பேசப்படுகிறது. சனிக்கிழமை 2 மணிக்கு தொடங்கவுள்ள பேராளர் கூட்டத்தில் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் என்பது முக்கிய விவாதமாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும் அந்த சட்டத் திருத்தம் குறித்து கருத்துரைக்க சக்திவேல் மறுத்து விட்டார்.
சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு 1, 500 பேராளர்களுடன் ம.இ.கா. பொது பேரவை தொடங்கவுள்ளது. அன்று இரவு கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் பேராளர்களுக்கு இரவு விருந்துபசரிப்பை வழங்கவுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் 71 ஆவது பொது பேரவையை அதிகாரபூர்வமாக தொடக்கி வைக்கவுள்ளார். இந்த பொதுப் பேரவையில் நான்காயிரம் கிளைத் தலைவர்களுடன், தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவிருப்பதாக சக்திவேல் தெரிவித்தார்.
பொது பேரவைக்கான அனைத்து தயார்நிலைகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் பேராளர்களுக்கான ஆண்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டதாக சக்திவேல் தெரிவித்தார்.
