லண்டன், செப்.21 –
இங்கிலாந்து லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் செல்சி, மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் அணிகள் 4 ஆவது சுற்றுக்குத் தேர்வுப் பெற்றுள்ளன. புதன்கிழமை நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் செல்சி 5 – 1 என்ற கோல்களில் நோட்டிங்ஹம் புரோஸ்ட் அணியை வீழ்த்தியது.
நோட்டிங்ஹம் புரோஸ்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் செல்சி நிர்வாகி அந்தோனியோ கொந்தே 9 மாற்றங்களைச் செய்திருந்தார்.அதேவேளையில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள செல்சியின் முன்னணி ஆட்டக்காரர் எடின் ஹசார்ட் 90 நிமிடங்கள் விளையாடி அசத்தியுள்ளார்.
இதனிடையே மென்செஸ்டர் சிட்டி 2 – 1 என்ற கோல்களில் வெஸ்ட் புரோம்விச் அல்பியோன் அணியைத் தோற்கடித்துள்ளது. இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டியின் இரண்டு கோல்களையும் லெரோய் சானே போட்டார்.
மூன்றாவது நிமிடத்தில் முதல் கோலைப் போட்ட சானே, 77 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் சிட்டியின் இரண்டாவது கோலைப் போட்டார். வெஸ்ட் புரோம்விச் அல்பியோன் அணியின் ஒரே கோலை 72 ஆவது நிமிடத்தில் யாக்கோப் போட்டார்.
இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டியின் மத்திய திடல் ஆட்டக்காரர் இல்கி குன்டோகன் காயம் அடைந்திருப்பது நிர்வாகி பெப் குவார்டியோலாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பருவம் முழுவதும் காயம் காரணமாக மென்செஸ்டர் சிட்டியில் களமிறங்காத குன்டோகன் அண்மையில்தான் முதன்மை அணிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடதக்கது.
எமிரேட்ஸ் அரங்கில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அர்செனல் 1 – 0 என்ற கோலில் டொன்காஸ்டர் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியின் ஒரே கோலை தியோ வோல்கோட் 25 ஆவது நிமிடத்தில் போட்டார்.
இந்த பருவத்தில் வோல்கோட் தனது முதல் கோலைப் பதிவுச் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
