மெட்ரிட், செப்.21 –
ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான ரியல் மெட்ரிட் 0 – 1 என்ற கோலில் ரியல் பெத்திசிடம் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தியாகோ பெர்னாபூ அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஐந்து ஆட்டங்கள் தடைக்குப் பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் ரியல் மெட்ரிட் அணியில் களமிறங்கினார்.
எனினும் இந்த ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் அணியின் முன்னாள் கோல் காவலர் அந்தோனியோ ஆடான் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டம், ரியல் மெட்ரிட் தாக்குதல் ஆட்டக்காரர்களை திணற வைத்தது.
ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்தோனியோ சனாபாரியா, ரியல் பெத்திஸ் அணிக்கு ஒரு கோலைப் போட்டார்.எனினும் ஒப்சைட் காரணமாக நடுவர் அந்த கோலை அங்கீகரிக்கவில்லை.
இருப்பினும் மனம் தளராத ரியல் பெத்திஸ் தொடர் தாக்குதல்களின் வழி ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் அந்தோனியோ சனாபாரியா மூலம் ஒரு கோலைப் போட்டு வெற்றி பெற்றது. இந்த பருவத்தில் சந்தியாகோ பெர்னாபூ அரங்கில் நடைபெற்ற எந்த ஓர் ஆட்டத்திலும் ரியல் மெட்ரிட் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இந்த தோல்வியை அடுத்து லீக் பட்டியலில் தனது பரம வைரியான பார்சிலோனாவைக் காட்டிலும் ஏழு புள்ளிகளில் ரியல் மெட்ரிட் பின் தங்கியுள்ளது.
