Site icon அநேகன்

வட கொரியாவின் அடாவடித்தனம் அடங்குவது எப்போது?

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தமது அச்சுறுத்தும் பாணியிலான அறிக்கைகளின் மூலம் வட கொரியாவுடன் போரைத் தொடக்கி அமெரிக்காவை போரில் உட்படுத்துவாரோ என்ற அச்சம் உருவாகி வருகிறது. அதனை ஒரு கேலியாகவே எடுத்துக்கொண்ட வட கொரியா, அமெரிக்காவை சீண்டி வம்புக்கிழுத்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையே போர் வரக்கூடாதென உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.

அண்மைய காலமாக வட கொரியா சில ஏவுகணைச் சோதனைகளை நிகழ்த்தி உலகத்தாரை அச்சுறுத்தி வரும் வேளையில், அவை அலாஸ்கா மற்றும் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டிருப்பதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். அது அணுவாயுதங்களைக் கொண்டுசெல்லும் ஆற்றலையும் கொண்டிருப்பதாகவும் கருதப்படுகிறது.

தற்போதைக்கு அமெரிக்காவைத் தாக்கும் வல்லமையை வட கொரியா கொண்டிருக்காவிட்டாலும், 2019ஆம் ஆண்டு வாக்கில் அது சாத்தியமாகலாம். எனினும், தற்போதைக்கு ஜப்பான், தென் கொரியா மற்றும் குவாம் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நிலைகளையும் 80,000 அமெரிக்கப் படைகளையும் தாக்கும் வலுவினை அது கொண்டிருப்பதாகவும் கருதப்படுகிறது. அமெரிக்காவும் தென் கொரியாவும் வட கொரியாவைத் தாக்கும் என்ற நிலை வரும்போது, வட கொரியாவே அவற்றின் குறியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

அதில் மில்லியன் கணக்கான ஜப்பான் மற்றும் தென் கொரிய மக்கள் ஆபாயத்துக்குள்ளாவார்கள். வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் எல்லையோரப் பகுதிகள் வட கொரியாவின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகும். ஜப்பானை நிர்மூலமாக்க மூன்று அணுகுண்டுகளும் தென் கொரியாவை முற்றாக அழிக்க இரண்டு அணுகுண்டுகளும் போதுமானது. அதுமட்டுமல்லாமல், உலகளவில் அணுக்கதிர்களை பரப்புவதன் மூலம் காற்றின் தூய்மை கெடவும் வட ஆசியாவின் நீர்வளம் அதில் கடுமையான பாதிப்புக்கும் உள்ளாகும். அணுக்கதிரின் தாக்கம் சீனாவையும் ரஷ்யாவையும் விட்டு வைக்கப் போவதில்லை. அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ள வட கொரியா பல ஆண்டுகளாகவே அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் வளத்தை மேம்படுத்தி வருவதால், அணுவாயுத ஆபத்து உலகைச் சூழ்ந்து வருகிறது.

ஈராக் மற்றும் லிபியா ஆகிய நாடுகளின் தலைவர்களை அகற்றிக் கொன்ற பின்னர், தனக்கு எதிராக செயல்படும் அணுவாயுதம் கொண்டிராத நாடுகளின் ஆட்சியை அமெரிக்கா கவிழ்க்கும் அபாயம் தோன்றியிருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டே வட கொரியா தனது அணுவாயுதச் சோதனை நடவடிக்கைகளை அடிக்கடி நிகழ்த்தி வருவதோடு உலக நாடுகளிடம் பூச்சாண்டியும் காட்டி வருகிறது. 1,020,800 படை வீரர்களையும் 88,000 சிறப்புப் படைவீரர்களையும் பயிற்சி பெற்ற 5 மில்லியன் சேமப் படையினரையும் தான் கொண்டிருப்பதாக வட கொரியா வீரப்பிரதாபம் காட்டிவருகிறது. அதன் போர் ஆயுதங்கள் பழமையானதென்றும் அதன் வான்படை பலமில்லாமல் இருப்பதால், அவற்றை அழிப்பதற்கு அமெரிக்காவுக்கு குறுகிய காலமே போதும். ஆனால், நேரடிப் போர் என்றால் வட கொரியா எளிதில் முறியடிக்கக்கூடியதே. என்றாலும் மறைமுகப் போர் என்றால், வட கொரியா பல காலம் தாக்குப் பிடிக்க முடியும் என நம்பப்படுகிறது.

அதன் மலைப் பிரதேசங்களில் தயார் படுத்தப்பட்டுள்ள சுரங்கக் குழிகளின் மூலம் அது போர் புரிய முடியும் என்றும் அந்தச் சுரங்கப் பாதைகளின் வழி ஆயிரக்கணக்கான போர் வீரர்களை நிலைநிறுத்த முடியும் என்றும் சொல்லப்படுகிறது, போர் வந்தால் இரண்டு பக்கமும் கடும் பொருள் சேதமும் உயிருடற் சேதமும் ஏற்படும். 1950- 53 ஆம் ஆண்டு கொரியப் போரில் 39000 அமெரிக்கப் போர் வீரர்களும் 2.5 மில்லியன் கொரிய மக்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  வியட்நாம் போரில் தோற்ற பின்னர், ஆப்கானிஸ்தான் போரில் வெற்றி பெறத் தவறிய அமெரிக்கா சிறிய நாடுகளைத் தாக்குமே தவிர பலம் கொண்ட வட கொரியாவை போருக்கு உட்படுத்த விரும்பாது. இரு நாடுகளுக்கிடையேயும் அப்படியொரு போர் நிகழ்ந்தால், 250,000 அமெரிக்கப் போர் வீரர்கள் கொல்லப்படுவதோடு, பில்லியன் கணக்கில் போருக்கான செலவும் ஏற்படும்.

எனவே, போரைத் தவிர்க்க சீனாவின் உதவியை அமெரிக்கா நாடக்கூடும். ஆனால், அதற்கு வட கொரியா சம்பாதிக்குமா என்பது சந்தேகமே. ஜப்பான், தென் கொரியா மற்றும் குவாம் தீவில் இருக்கும் அமெரிக்க ராணுவத் தளங்களையும் சீனாவிற்கு நெடுந்தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவின் 7ஆவது பட்டாளத்தையும் அது முற்றாக அகற்றினால் மட்டுமே வட கொரியா பின்வாங்க இணக்கம் தெரிவிக்கும்.  மேலும் 2.5 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் வட கொரியா அமெரிக்காவின் பொய்யான பிரசாரத்தைக் கண்டு பயப்படுவதாக இல்லை. அமெரிக்கா, தென் கொரியா மற்றும் வட கொரியா நாடுகள் தற்போதும் போர் அபாயத்தில் இருக்கின்றன என்பதே உண்மையாகும். இதற்கு முன்பு நடந்த கொரியாவுடனான யுத்தம் ஒரு தற்காலிக உடன்பாட்டின் வழியில் முடக்கம் கண்டிருக்கிறது. மாறாக, அது முற்றாக நிறுத்தப்படவில்லை.

அந்தப் போருக்குப் பின்னர் வட கொரிய அரசை வீழ்த்த அமெரிக்கா அச்சுறுத்தல், ரகசிய உளவு நடவடிக்கை மற்றும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் அதனைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது, அணுவாயுதத் தாக்குதல் அல்லது திடீர் தாக்குதல் நடந்தால் அது தென் கொரியாவுக்கே பாதகமாக முடியும். எம்மாதிரியான ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் தங்களைக் கலந்து பேசியே அது நடத்தப்பட வேண்டுமென தென் கொரியாவின் புதிய அதிபர் மூன் ஜெய் இன் வலியிறுத்தியுள்ளார். எனினும் அந்தக் கோரிக்கையை டோனால்ட் டிரம்ப் கேட்பதாக இல்லை. பெரும்பாலான தென் கொரியர்கள் போர் எதுவும் நடக்காது என்றே கருதுகின்றனர். ஆயினும், போர் என்று ஒன்று நடந்தால் பெரும் பாதிப்புக்குள்ளாவது அவர்களாகத்தான் இருக்க முடியும்.

வட கொரியாவின் ஏவுகணைத் தாக்குதலைத் தடுக்க ஏவுகணை தடுப்பு ஆயுதங்களைத் தயாரிக்கும் சோதனைகளையும் ஆய்வுகளையும் நடத்த அமெரிக்கா 20.000 கோடி அமெரிக்க டாலரைச் செலவிட்டுள்ளது. அந்தச் சாதனங்கள் சிறப்பாகச் செயல்பட மேலும் பல கோடிகளை அது செலவிட வேண்டிவரும். இந்தச் செலவை முற்றாகத் தடுக்க அமெரிக்கா வட கொரியாவை அங்கீகரித்தால் மட்டுமே போதுமானது. இரு நாடுகளுக்கும் இடையே ராஜ தந்திர உறவுகளைத் தொடக்கி. கிம் ஜோன் உன்னை கவிழ்க்காமலிருக்க உறுதி கூறினால், அதனுடனான போரைத் தடுக்க முடியும்.

 

Exit mobile version