Site icon அநேகன்

சேமப்படை வீரர்களை உட்படுத்திய விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு உதவும்! அ. சிவநேசன் தகவல்

ஈப்போ, மே 14- தெலுக் இந்தானில் நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமுற்ற சேமப்படை வீர்களின் குடும்பங்கள் குறிப்பாக அவர்களின் பிள்ளைகளுக்கு எவ்வகையான உதவிகள் வழங்குவது குறித்து அரசு ஆராய்ந்து வருவதாக இம்மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அச்சாலை விபத்தில் காயமடைந்த ஐந்து சேமப் படை வீரர்கள் இன்னும் கவலைக் கிடமான நிலையில் உள்ளனர். நால்வர்தெலுக் இந்தான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் ஒருவர் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பேராக் சுகாதார குழுத் தலைவருமான அவர் விவரித்தார்.

மூவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று இங்குள்ள லஹாட்டில் மறைந்த எஸ். பெருமாளின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

நேற்று  நடந்த விபத்தில் பலியான ஒன்பது சேமப்படை வீரர்களில் 44 வயதான சார்ஜன் பெருமாளும் ஒருவராவார்.

தெலுக் இந்தான் சித்ரா பௌர்ணமி திருவிழாவில் தங்கள் கடமைகளை முடித்துவிட்டு ஈப்போ சுங்கை செனமில் உள்ள சேமப்படையின் 5 ஆவது தளத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் ​​இவர்கள் பயணித்த வாகனம் சரளைக் கற்கள் ஏற்றியிருந்த லாரியில் மோதியது .

இவர்களில் எண்மர் சம்பவ இடத்திலும் மேலும் ஒருவர் தெலுக் இந்தான் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் உயிரிழந்த 9 சேமப்படை வீரர்களுக்கு காவல் துறை முழு மரியாதையோடு இறுதி அஞ்சலி செலுத்தியது.

மறைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு சிவநேசன் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

அதே வேளையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

 

 

 

 

 

 

 

Exit mobile version