Site icon அநேகன்

ஆசிரியர்களின் பணியிட மாற்றம் :2 ஆண்டுகளுக்கு பிறகுதான் – ஃபட்லினா சிடேக் விளக்கம்

கூச்சிங்: மே 16-ஒரு பள்ளியில் இரு ஆண்டுகள் பணியாற்றியப் பிறகே ஆசிரியர்கள் பணி இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் திட்டவட்டமாகக் கூறினார்.

அதற்கு எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படமாட்டா  என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியமைச்சு ஆசிரியர்களுக்கு வெளியிட்டுள்ள 6 நற்செய்திகளில் இதுவும் ஒன்று என்று ஃபட்லினா தெரிவித்தார்.

இது தவிர, கல்வியமைச்சு இவ்வாண்டு 1,470 பேரை உதவி ஆசிரியர்களாகப் பணியமர்த்தவிருப்பதாக ஃபட்லினா மேலும் விவரித்தார்.

இதனைத் தொடர்ந்து, இத்துறையில் ஆற்றிய சிறந்த சேவைக்காக விருதுகளைப் பெற்ற 32 ஆசிரியர்கள் உலகளாவிய Immersion For Future-Ready Teachers (GIFT) திட்டத்தின் கீழ்  ஓர் இங்கிலாந்து அனைத்துலகப் பள்ளியில் இலவசமாக பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட பல துறைகளில் கூடுதல் அறிவையும் அனுபவத்தையும் பெறுவதற்கான பயிற்சி திட்டங்களில் கலந்து கொள்ள கல்வி அமைச்சு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும்  என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

‘MH GoM’ அகப்பக்கம் வழியாக அனைத்து இடங்களுக்கும் ஆசிரியர்களுக்கான விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு 20 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

MOE இன் DELIMa ஐடியைப் பயன்படுத்தி ஆன்லைன் கொள்முதல்களுக்கு 20 முதல் 30 விழுக்காடு வரை புத்தகம் வாங்குவதற்கு தள்ளுபடி வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

சரவாக், கூச்சிங்கில் அமைந்துள்ள போர்னியோ கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின் ஃபட்லினா இந்த 6 அறிவிப்புகளை வெளியிட்டார்.

Exit mobile version