கோலாலம்பூர், மே 18-உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்நாட்டிலுள்ள இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனம் பல்வேறு வியூக திட்டங்களை அமல்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இவற்றில் இலக்கவியல் அமைச்சின் ஒத்துழைப்போடு இச்சங்கம் கடந்த வாரம் நடத்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயிற்சி திட்டமாகும் என்று இச்சம்மேளனத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் குறிப்பிட்டார்.
அவ்வகையில் முதற்கட்டமாக நடத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு பயிற்சி திட்டத்தில் 100 பேர் கலந்து கொண்டனர். தங்களின் வர்த்தகத்தை அடுத்த நகர்வை நோக்கிக் கொண்டு செல்ல இவர்கள் காட்டிய ஆர்வம் இதில் தெரிந்தது என்றார்.
“டிக் டோக் மூலமும் விற்பனை யுக்திகளை வலுப்படுத்தி வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை நாங்கள் கற்றுத் தருகிறோம்” என்று இங்குள்ள சிலாங்கூர் ரோயல் கிளப்பில் சங்கத்தின் 96 ஆவது ஆண்டு கூட்டத்தையொட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் விவரித்தார்.
இக்கூட்டத்தை தேசிய குடிநீர் சேவை ஆணையத்தின் (ஸ்பான்) தலைவர் சார்லஸ் சந்தியாகோ அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இவர்களுக்குத் தக்க பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்பதே சங்கத்தின் தற்போதைய கவனம் எல்லாம் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
சிறப்பு பிரமுகர் சார்லஸ் சந்தியாகோ தமது உரையில் சங்கம் ‘சமூக பொருளாதார ஆய்வு மையத்தை’ அமைப்பது குறித்து குறிப்பிட்டிருந்தார். இது பற்றி ஆண்டு கூட்டத்தில் பேசி நல்ல முறையில் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் நிவாஸ்.
தீர்மானங்கள், பரிந்துரைகள், புதிய கணக்காய்வாளர்கள் நியமனம் போன்ற விவகாரங்களோடு சங்கத்தின் ஆண்டு கூட்டம் மதிய வேளையில் இனிதே ஒரு நிறைவை நாடியது.

