Site icon அநேகன்

சமூக சேவைக்கு கிடைத்த அங்கீகாரம்: ‘பன்முக திறமை கொண்ட ராணி’ விருது பெற்றார் ராணி லிங்கம்! 

கோலாலம்பூர், மே 19-சமயம், சமூகம், அரசியல் என பல துறைகளில் ஆற்றிய சேவைகள் வழி ‘பன்முக திறமை கொண்ட ராணி ’விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார் ராணி லிங்கம்.

இவர் தனது கணவர் மற்றும் இரு மகள்களோடு காஜாங், சுங்கை லோங்கில் வசித்து வருகிறார்.

தலைநகர், ஜாலான் புடு லாமா, சிக்னெச்சர் ஹோட்டலில் நேற்றிரவு நடைபெற்ற விருதளிப்பு நிகழ்ச்சியில் இவர் இந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

சென்னை, அருண் குமார் தலைமையிலான கலாச்சாரம், அமைதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான அனைத்துலக அறவாரியத்தின் ஏற்பாட்டிலான நிகழ்ச்சியில் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

தொண்டூழிய சமய மற்றும் சமூக சேவையாளர், சிவில் இன்ஜினியர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், தொழில் முனைவர் என பல பொறுப்புகள் வழி பன்முக திறமையாளருக்குரிய தகுதியைப் பெற்றுள்ளார் இவர்.

18 வயதில் கிளைத் தலைவர் என்ற பொறுப்பேற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்ற இவர், சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர், துணைத் தேர்தல் பதிவதிகாரி என பல்வேறு அரசியல் பதவிகளையும் அலங்கரித்துள்ளார்.

தொடர்ந்து பல இயங்கங்களுக்கு உறுப்பினர் சேர்ப்பு நடவடிக்கை , சமூக நல திட்டங்கள், பயிற்சி பட்டறைகள் போன்றவற்றை வெற்றிகரமாக நடத்திய பெருமையும் இவரையேச் சாரும்.

80 முதியோர்கள் மற்றும் பேறு குறைந்தோருக்கு உதவி, பசியால் வாடியோருக்கு உணவு, வீடிழந்தவர்களுக்கு வீட்டை மறு நிர்மாணிப்பு செய்து கொடுத்தல், ஆறுகளைத் தூய்மைப்படுத்துதல் என நீள்கிறது இவரின் சேவைப் பட்டியல்.

தற்போது அரசியல் துறைக்கு ஓய்வு கொடுத்து ‘என் தமிழ் ‘இணைய ஊடகம் வழி ஊடக துறையில் தனக்கென தனி பாணியில் தன்னடக்கமாக உலா வருகிறார் ராணி.

 

Exit mobile version