பீடோர், மே 19-அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் வசித்து வந்த சுங்கை கம்போங் செங்காய் மற்றும் குவால பீக்காம் கிராம மக்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது.
இதன் வழி கடந்த 40 ஆண்டுகால நிலப்பிரச்சினைக்கு வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டதாக சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ. சிவநேசன் தெரிவித்தார்.
கடந்த 50 ஆண்டு காலமாக செங்காய் தோட்டத்தில் வாழ்ந்து வந்த மக்கள் அந்த தோட்டம் விற்கப்பட்டதால் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள பொதுப் பணி இலாகாவிற்கு சொந்தமான நிலத்தில் குடியேறினர்.
இதே போன்று தெலுக் இந்தான் சாலையில் உள்ள கம்போங் பாரு , குவால பீக்காம் எனும் கிராமத்தில் வசித்து வரும் 52 குடும்பங்களின் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு பிறந்துள்ளது என்றார் அவர்.
நேற்றிரவு பீடோர் நகரில் 9 லட்சம் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மண்டபத்தைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
கம்போங் செங்காய் மற்றும் குவால பீக்காம் கிராம மக்களிடம் நிலப்பட்டாக்களை வழங்கி மகிழ்வித்தார் .
சுங்கை சட்டமன்றத் தொகுதியில் 100 விழுக்காடு நிலப் பிரச்சினைகளுக்குத் தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் சுங்கை சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஆலயங்கள் மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு சிவநேசன் மானியத்தை வழங்கினார்.

