Site icon அநேகன்

ஜனனம் 5.0 வழி கரம் கோர்ப்போம், கருணை பொழிவோம்!

கோலாலம்பூர், மே 20-ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களைக் கொண்ட குடும்பங்கள் படும் வேதனையை பொது மக்கள்  அறிந்து கொண்டு அவர்களுக்கு பரிவு காட்ட  ஏதுவாக  ஜனனம் 5.0 நிகழ்ச்சி தலைநகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி இம்மாதம் 25ஆம் தேதி மாலை மணி 6.30க்கு கோலாலம்பூர்,ஜாலான் சைட் புத்ரா, குயென் செங் இடைநிலைப்பள்ளி பொது மண்டபத்தில்  நடைபெறும் .

சிறப்பு கவனிப்புக்கு உட்பட்ட ஆட்டிஸம்  பாதிப்புடையவர்களின் பல்வேறு  திறமைகளை இந்நிகழ்ச்சி வழி காணலாம்.அதே வேளையில், இவர்களை அரவணைத்து வரும் குடும்பத்தினர் படும் சொல்லணா வேதனையையும் உணரலாம்.

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டு எள்ளி நகையாடுவதை விடுத்து அவர்களை அரவணைத்து வரும் குடும்பத்தை ஆக்கப்பூர்வ வார்த்தைகள் வழி உற்சாகப்படுத்தும்படி ஜனனம் 5.0 நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான நாட்டின் பிரசித்தி பெற்ற பாடகி திலா லஷ்மன் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

இவரது மகன் தன்வி ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர். இத்தகைய பாதிப்பைக் கொண்ட ஒரு குழந்தையை வளர்ப்பதில் தான் எதிர்நோக்கி வரும் சவால்கள் யாவை என்பதை இவர் நன்கு உணர்ந்துள்ளார். ஆகையால், இதுபோன்ற சூழலை எதிர்நோக்கி வரும் மற்ற பெற்றோர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவதற்காக பல்வேறு முயற்சிகளை  முன்னெடுத்துள்ளார் திலா லஷ்மன்.

இவற்றில் ஒன்றுதான் பெர்துபொஹான் சயாங் மலேசியா (பெர்சாமா) தொண்டூழிய நிறுவனத்தை இவர் அமைத்தது.

இதன் வாயிலாக ஆட்டிஸம் பாதிப்புடைய பல குடும்பங்களின் தேவைகளை இவர் செவ்வனே நிறைவேற்றி வருகிறார்.

ஆட்டிஸம் பாதிப்புற்றவர்களுக்கும் தனித்திறன்கள் உள்ளன. ஆடல், பாடல், நடிப்பு போன்ற இத்திறன்களை வெளி உலகத்திற்குக் கொண்டு வருவதற்காக பல நல்லுங்களின் ஒத்துழைப்போடு இவர் ஏற்பாடு செய்திருப்பதுதான் ஜனனம் 5.0 நிகழ்ச்சி.

ஆட்டிஸம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு இச்சிறப்பு சிறார்களைக் கொண்டிருக்கும் பி 40 பிரிவு மக்களின் நிதிச் சுமையை ஓரளவு குறைக்கும் உன்னத நோக்கத்திற்காகவும் இந்நிகழ்ச்சியை இவர் நடத்துகிறார்.

இதில் சிறப்பு அங்கங்களில் ஒன்றாக ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கி வரும் போராட்டத்தை விவரிக்கும் மேடை நாடகம் இடம் பெறும்.

அனில் ஷத்ரியன் இயக்கியுள்ள இந்நாடகத்தின் திரைக்கதையை திலா லஷ்மன் எழுதியுள்ளார்.

இது தவிர, ஆட்டிஸம் நட்சத்திரங்கள் சஞ்சேவ் ராம், குகேந்திரன் இருவரின் சிறப்பு படைப்பும் நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாடகி அருளினியின் வருகையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆட்டிஸம் பாதிப்புடையவர்களின் குடும்பங்களுக்கு தனி உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஜனனம் 5.0க்கான டிக்கெட்டுகளை வாங்கி ஆதரவு தரும்படி  பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தொடர்புக்கு திலா லஷ்மன் 018-3980430.

 

 

Exit mobile version