கோலாலம்பூர், மே 27-ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனித்திறன்கள் உள்ளன என்பதை மற்றவர்கள் அறிய வேண்டும் என்பதற்காக திலா லக் ஷ்மன் ஏற்பாடு செய்த ஜனனம் 5.0 ஒரு பிரம்மாண்ட விழாவாக திகழ்ந்தது.
கோலாலம்பூர்,ஜாலான் சைட் புத்ரா, குயென் செங் இடைநிலைப்பள்ளி மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
திலா லக் ஷ்மனின் கடின முயற்சிக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்றுதான் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட வேண்டும்.
சிறந்த ஒளி, ஒலி, இசை, மேடை அமைப்பு என ஒரு பிரம்மாண்ட விழாவாக ஜனனம் 5.0 ஐ அதன் ஏற்பாட்டாளர்கள் உருவாக்கியது பாராட்டுக்குரியது .
சிறப்பு அங்கமாக திலாவோடு இணைந்து குகேந்திரன், சஞ்சேவ் வழங்கிய ‘ மந்திரம் வச்சேனே’ பாடல் அனைவரையும் கவர்ந்தது. இவர்களின் குரலில் ஒலித்த ஜனரஞ்சகமான இப்பாடலில் வருகையாளர்கள் அனைவரும் இலயித்த வேளையில் தமிழகத்தில் தயாரிக்கப்படும் 1330 திருக்குறள்கள் கொண்ட குரலிசை காவியத்தில் சஞ்சேவ்வின் குரலும் இடம் பெறப் போகிறது என்று பாடலின் இறுதியில் திலா கூறியபோது அரங்கமே கைதட்டலுடன் அதிர்ந்தது.
இதனை நிறைவேற்றும் வகையில் ஜனனம் 5.0 நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்த பிரதமரின் சிறப்பு அதிகாரி ஜோனாதன் வேலா மற்றும் துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அரவிந்த் அப்பளசாமி ஆகியோரின் முன்னிலையில் அதன் போஸ்டரை திலா தொடக்கி வைத்தார்.
தமிழக சரிகமப புகழ் அருளினியின் ‘மலர்களே’ என்ற பாடலும் நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.
அனில் ஷத்ரியன் இயக்கத்தில் திலா லஷ்மன் திரைக்கதை எழுதிய நாடகம் ஆட்டிஸம் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட குடும்பங்கள் எதிர்நோக்கும் போராட்டங்களை உயிரோட்டமாகச் சித்தரித்தது.
பலரின் மனதில் பல புரிதல்கள், மனவோட்டங்களை ஜனனம் 5.0 ஏற்படுத்தியது என்பது இதில் ஆர்வத்தோடு கலந்து கொண்டு ஆதரவு வழங்கியவர்களின் வருகை தெள்ளத் தெளிவாகப் புலப்படுத்தியது.
‘மண்ணுயிரைத் தன்னுயிராய் நினை’ என்பதற்கொப்ப ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட மகனின் தாயார் என்ற நிலையில் மற்ற தாய், தந்தையர்கள் படும் வேதனைகளை பொது மக்கள் புரிந்து கொண்டு அவர்களை அரவணைக்க வேண்டும் என்பதற்காக ஜனனம் நிகழ்ச்சியை திலா ஐந்தாம் ஆண்டாக நடத்தியுள்ளார்.
இந்நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கும் துணை புரிந்த அனைத்து நல்லுங்களுக்கும் நன்றி மலர்களைச் சமர்ப்பித்தார் திலா.

