கோலாலம்பூர், மே, 28-
புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில், புதன்கிழமை இரவில் நடைபெற்ற மேபேங்க் சேலஞ்ச் கிண்ண நட்புமுறை ஆட்டத்தில், இங்கிலாந்தின் ஜாம்பவான் அணியான மென்செஸ்டர் யுனைடெட், ஒரு கோலில் ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் அணியிடம் வீழ்ந்தது.
ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் அணியின் வெற்றிக்கோலை, ஆட்டத்தின் 71ஆவது நிமிடத்தில் மியன்மார் ஆட்டக்காரர் மௌங் மௌங் வின் புகுத்தினார்.
இப்பருவத்தில் படுமோசமான ஆட்டத்தரத்தை வழங்கிவந்த பயிற்றுநர் ருபன் அமொரிம் தலைமையிலான மென்செஸ்டர் யுனைடெட்டுக்கு, இத்தோல்வி மேலும் ரணத்தை வழங்கியுள்ளது.
முதன்மை ஆட்டக்காரர்களை களமிறக்கியிருந்தும் ஆட்டத்தின் தொடக்கம் முதல் இறுதி வரையில், மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்கள் தடுமாற்றங்களுடன் காணப்பட்டனர்.
அதேவேளையில், ஆசியானின் தலைச்சிறந்த ஆட்டக்காரர்களுடன் களமிறங்கியிருந்த ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் அணியினர் நிதானத்துடன் களமாடினர்.

