Site icon அநேகன்

பேராக்கிலுள்ள இந்து ஆலயங்களின் வளர்ச்சிக்கு மாநில அரசாங்கம் பெரும் பங்காற்றுகின்றது

ஈப்போ, ஜூன் 2-

பேராக்கில், இந்து ஆலய விவகாரங்களுக்குத் தீர்வுக்கான மாநில அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுத்து வருவதாக பேராக் இந்து சங்கம் கூறியது.

இம்மாநிலத்தில் அரசாங்க நிலத்தில் கட்டப்பட்டுள்ள ஆலயங்களை அகற்றும் நடவடிக்கை மற்றும் முறையான ஆவணங்களைச் சங்கங்களின் பதிவு இலாகாவிற்கு (ஆர்.ஓ. எஸ்) அனுப்பாத ஆலயங்களின் பதிவுகளை ரத்து செய்யப்படும் சம்பவமும் தலை தூக்கியுள்ளது.

இந்த விவகாரங்களில், பாதிக்கப்பட்டவர்கள் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசனின் கவனத்திற்கு அவற்றைக் கொண்டுச்சென்றுள்ளனர். அத்தரப்பினர்களுக்கு உதவ, அ. சிவநேசன் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக, பேராக் இந்து சங்கத் தலைவர் சுந்தரசேகர் பெருமாள் கூறினார்.

தற்பொழுது, பேராக்கில், அரசாங்க நிலங்களில் கட்டப்பட்டுள்ள பல  ஆலயங்களுக்கு அகற்ற வழங்கப்பட்டுள்ள நோட்டீஸ்கள் பெரும் சரச்சையாக இருந்து வருகின்றன.

அந்த ஆலயங்கள் தம்முடைய அனுமதியின்றி உடைக்கப்படாது என்று சிவநேசன் உறுதியளித்துள்ளார். முன்னதாக, அவற்றுக்கு தீர்வுக்கான வழி வகைகளை ஆராய்ந்து வருவதுடன் மாவட்ட நில அலுவலக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையை சிவநேசன் நடத்தி வருவதையும் அவர் குறிப்பிட்டார்.

ஆலய நிர்வாகங்கள் முறையான பதிவு செய்திருப்பதுடன்,  ஆலயம் சார்ந்த ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும். மேலும், அதன் சுற்றுவட்டார மக்களின் ஒத்துழைப்புடன் சமுக பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்  சுந்தரசேகர் பெருமாள் வலியுறுத்தினார்.

Exit mobile version