கோலாலம்பூர், ஜூன் 11-
சீர்திருத்தங்கள் மெதுவாக மேற்கொள்ளப்படுவது குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், தன்னால் முயன்ற சீர்த்திருத்தக் கொள்கைகளை முன்னெடுத்து வருவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த கொள்கையை செயல்படுத்த நேரம் தேவைப்படுவதாகவும், பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஆதரவு தேவைப்படுவதாகவும் கூறிய அவர், தமது தலைமையிலான கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மை இல்லாததைச் சுட்டிக்காட்டினார்.
சிலர் சீர்த்திருத்தங்கள் தாமதமாக நடைபெறுவதால், பொறுமையிழந்து விட்டனர். நாம் சீக்கிரமாக அவற்றை முன்னெடுக்கலாம். ஆனால், நாளையே வீழ்த்தப்படும் சாத்தியம் உள்ளதால், இதை புத்திசாலித்தனமாக மேற்கொள்ள வேண்டும்.
புத்திசாலித்தனம் மிகவும் முக்கியமானது, நீங்கள் பேசும் விதத்தில் மட்டுமல்ல, நீங்கள் செயல்படும் விதத்திலும் உள்ளது. உங்களிடம் வளங்கள் உள்ளனவா? தேவையான ஆதரவு உங்களுக்கு உள்ளதா?
எந்த நிலையில் இருந்து தொடங்குவது? ஒரு வருடத்தில், இரண்டு வருடங்களில், அல்லது மூன்று வருடங்களில் இந்த பெரிய சீர்திருத்தங்களை செய்ய முடியுமா? எனக்குத் தெரியவில்லை. என்னிடம் அதற்கான பதில்களும் இல்லை.
ஆனால், தான் ஒருபோதும் அதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை. ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வருடமும் சீர்த்திருத்த அமலாக்கத்தில் முன்னேற்றம் உள்ளதைத் தாம் காண்பதாக பிரதமர் கூறினார்.
பொறுமையற்றவர்களும், சீர்திருத்தங்கள் முன்கூட்டியே செயல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புபவர்களும் உண்மைகளையும் யதார்த்தங்களையும் உணராத குருடர்கள்.
222 நாடாளுமன்ற தொகுதிகளில் பாக்காத்தான் ஹரப்பானுக்கு 81 தொகுதிகள் மட்டுமே உள்ளதால், சீர்திருத்த கொள்கைக்கான ஒருமித்த கருத்தை உருவாக்க, தேசிய முன்னணி (பிஎன்), சரவாக் கட்சிஜளின் கூட்டமைப்பு (ஜிபிஎஸ்), மற்றும் சபா மக்கள் கூட்டமைப்பு (ஜிஆர்எஸ்) போன்ற கூட்டணிகளுடன் இணைந்து செயல்பட வேண்டியுள்ளதை டத்தோ ஸ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.

