Site icon அநேகன்

உப்சி விபத்து: பொதுவில் கருத்துகளை வெளியிட வேண்டாமென பேருந்து ஓட்டுநருக்கு போலீஸ் அறிவுறுத்தியது.

ஈப்போ, ஜூன் 11 —

சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகம் – உப்சியின் 15 மாணவர்களின் உயிரைப் பறித்த விபத்து தொடர்பில், அதிகாரப்பூர்வ வாக்குமூலம் பதிவு செய்யப்படும் வரையில், பேருந்து ஓட்டுநர் பொதுவில் அறிக்கைகளை வெளியிட வேண்டாமென பேராக் போலீஸ் வலியுறுத்தியுள்ளது.

ஓட்டுநரின் முன்கூட்டிய பொது கருத்துக்கள், தற்போதைய விசாரணையை பாதிக்கலாம்; தேவையற்ற ஊகங்களை தூண்டலாம் என பேராக் போலீஸ்த் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் கூறினார்.

அவருக்கு பேசும் உரிமை இருந்தாலும், அவரது வாக்குமூலத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யும் வரையில் காத்திருக்கும்படி தங்கள் தரப்பு பரிந்துரைக்கின்றது.

பேருந்து நிறுவனம், பாதையின் நிலைமை, தொழில்நுட்ப அம்சங்கள் உள்பட பல்வேறு கோணங்களை உள்ளடக்கியுள்ளது.

விசாரணையை முழுமையாக நடத்த அனுமதிப்பது மிகவும் முக்கியம்.விசாரணை முடிந்தவுடன் இறுதி முடிவுகள் பொதுவில் வெளியிடப்படும் என பேராக் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

ஓட்டுநர் இன்னும் மருத்துவமனையில் இருந்து வெளியேறவில்லை என்பதால், அவரை தடுப்புக்காவலில் வைக்கவில்லை என்றாரவர்.

நேற்று, ஓட்டுநர் மொஹ்ட் அமிருல் பாதில் ஜுல்கிப்லே, நடந்த விபத்திற்காக பொதுவில் மன்னிப்பு கோரியதோடு, தாம் வேகமாக சென்றதாக கூறப்படும குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்.

கெரிக் பகுதியில் உள்ள யானை கடவு பாலத்திற்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் இறங்கும்போது திடீரென பிரேக் தோல்வியடைந்ததால் விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார்.

பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கீழே இறங்கியபோது, அது மற்ற வாகனங்களுடன் மோதாமல் தடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ததாகவும் மொஹ்ட் அமிருல் குறிப்பிட்டிருந்தார்.

மற்றொரு நிலவரத்தில், விபத்து தொடர்பாக 18 நபர்களிடம் போலீஸ் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக, டத்தோ நூர் ஹிசாம் கூறினார்.

காயமடைந்த 13 மாணவர்கள், ஒரு சிவப்பு பெரோடுவா அல்ஸா வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் அவரது மனைவி, கெரிக் மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள், விபத்து பதிவான டாஷ்கேம் காணொளியின் வாகன ஓட்டுநர் முதலானோர் அவர்களில் அடங்குவர் என அவர் கூறினார்.

Exit mobile version