கிள்ளான், ஜூன் 12-
நீதிமன்ற தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை 25 குடும்பங்களுக்குத் தொந்தரவு தரக் கூடாது என்று கம்போங் ஜாவா அருகே பந்திங்- தைப்பிங் விரைவு சாலை நிர்மாணிப்பில் ஈடுபட்டு வரும் மேம்பாட்டு நிறுவனத்தை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக் கொண்டார்.
இந்த 25 குடும்பங்களுக்கு 75 விழுக்காடு இழப்பீட்டை மட்டுமே மேம்பாட்டு நிறுவனமான மேற்கு நெடுஞ்சாலை நிறுவனம் வழங்கியுள்ளது. பாக்கி 25 விழுக்காடு தொகை இன்னும் இழுபறியாகவே உள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கு மீதான விசாரணை வரும் ஜூலை 30 மற்றும் ஆகஸ்டு 21ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
அதற்கு முன்னதாக குடியிருப்பாளர்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்காக பல நடவடிக்கைகளில் அந்நிறுவனம் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மின்சார இணைப்பைத் துண்டிப்பது, இரவு வேளைகளில் குடியிருப்பு பகுதியில் நடமாடுவது, குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் மணலைக் குவிப்பது போன்ற செயல்களில் குத்தகையாளர்கள் ஈடுபட்டு வருவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.
“குடியிருப்பாளர்களுக்கு இதுபோன்ற தொந்தரவைக் கொடுப்பதை மேம்பாட்டு நிறுவனம் நிறுத்திக் கொள்ள வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை இவர்கள் இந்த இடத்தில் நிம்மதியாக இருப்பதற்கு மேம்பாட்டு நிறுவனம் அனுமதிக்க வேண்டும்”என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் குணராஜ் விவரித்தார் .

