கோலாலம்பூர், ஜூன் 13-
தகவல் துறையில் மேற்கல்வி தொடரும் மாணவர்கள் அல்லது ஊடக துறையில் ஆர்வம் உள்ளவர்கள் 2025 ஹவானா விழாவில் கலந்து கொண்டு வாய்ப்புகளைக் கண்டறியும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
2025 ஹவானா விழா தலைநகர், சன்வே புத்ரா பேரங்காடியில் நாளை சனி மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என இரு தினங்கள் நடைபெறவிருக்கின்றது.
முதன் முறையாக உள்நாட்டு ஊடக நிறுவனங்கள் அனைத்தையும் ஒரு நிகழ்ச்சியின் கீழ் ஒன்றிணைப்பதன் வழி தேசிய ஊடக துறை தினம் 2025 (ஹவானா) வரலாற்றைப் படைக்கும் என்று பெர்னாமா தலைமை ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.
“அனைத்து ஊடக நிறுவனங்களையும் உட்படுத்தி முதன் முறையாக நாங்கள் இவ்விழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம். இது உள்நாட்டு ஊடக துறையின் வளர்ச்சியைப் பறைசாற்றும் “ என்றார் அருள் ராஜூ.
“ஒவ்வோர் ஊடக நிறுவனத்திற்கும் நேரில் வருகை புரிவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆகையால், இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று திரட்டவுள்ளோம்”என்று இங்குள்ள சன்வே புத்ரா பேரங்காடியில் ஹவானா 2025 விழாவின் தயார் நிலையைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இவ்விழாவில் பெர்னாமாவின் சேவைகள், நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் டிஜிட்டல் பத்திரிகை விநியோகம், புதிர் போட்டி, செய்தி வாசிப்பு போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

