போர்டிக்சன், ஜூன் 15-
நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலில், தேசிய முன்னணியிலுள்ள ம.இ.கா, ம.சீ.ச. உள்ளிட்ட உறுப்புக் கட்சிகளுக்கு கட்டாயம் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி உறுதியளித்தார்.
அத்தேர்தலில், கூட்டணியின் சின்னமான தராசு சின்னம் தொடர்ந்து பயன்படுத்தப்படும். பொதுத்தேர்தலுக்கு இன்னும் அவகாசம் இருந்தாலும், அந்நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாக, இன்று போர்ட்டிக்சன் அம்னோ தொகுதி கூட்டத்தை வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
1987ஆம் ஆண்டு அம்னோ பிளவுப்பட்ட போது, தேசிய முன்னணி நிலைத்திருக்க, ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன. அவ்விரு கட்சிகளின் தியாகங்களும் அர்ப்பணிப்புகளும் என்றென்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஒன்று என துணைப்பிரதமருமான டத்தோ ஸ்ரீ ஸாஹிட் சொன்னார்.
கடந்த 14 மற்றும் 15 ஆகிய பொதுத்தேர்தல்களில், ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் அவற்றின் தொகுதிகளை தக்கவைக்க முடியாமல் பிரச்சினைகளை எதிர்கொண்டன.
எனவே, அவ்விரு கட்சிகள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது அம்னோ கவனித்துக்கொள்ள வேண்டும். தேசிய முன்னணியை வலுப்படுத்த அந்த மனப்பாங்கே உதவும்.
தற்போது, தேசிய முன்னணியிலுள்ள உறுப்பு கட்சிகள் தொடர்ந்து ஒன்றாக இருந்து கூட்டணியை வலுப்படுத்துவார்கள் என டத்தோ ஸ்ரீ ஸாஹிட் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

