Site icon அநேகன்

‘கோவில் ஹராம்’ உள்ளிட்ட  விவகாரங்களை மேற்பார்வையிட சட்டம் தேவை! டத்தோ லோகபாலா

கோலாலம்பூர், ஜூன் 15-

‘கோவில் ஹராம்’ உள்ளிட்ட விவகாரங்களை மேற்பார்வையிட ஒற்றுமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா வலியுறுத்தினார்.

இந்து ஆலயங்கள் குறித்து கோவில் ஹராம் என்ற வார்த்தை இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் விவகாரம் தலைதூக்கிய போது இந்தக் கோவில்  கோவில் ஹராம் என்று முத்திரை குத்தப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

பின்னர் நாட்டில் உள்ள பல ஆலயங்கள் சட்டவிரோத கோவில்கள் என்று கூறப்பட்டது.இந்தக் ‘கோவில் ஹராம்’ என்ற வார்த்தை மிகவும் கடுமையானது.

இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண  ஒற்றுமை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று  இங்குள்ள பிபிபி தலைமையகத்தில் அதன் மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம்  டத்தோ லோகபாலா இதனைக் கூறினார்.

நேற்றைய கூட்டத்தில் பிபிபி தொடர்பில் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

குறிப்பாக பினாங்கு மாநிலத்தில் வீடுகளை வாங்கும் இந்திய முஸ்லிம் மக்களுக்கு 5 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்று தொடக்கத்தில்  அறிவிப்பு செய்யப்பட்டது.

“இதனை நாங்கள் வரவேற்கிறோம். அதேசமயம் பி40 குடும்பங்களை சேர்ந்த அனைத்து இன மக்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட வேண்டும் என்றார்  லோகபாலா.

வசதி குறைந்த அனைத்து இன மக்களையும் அரசாங்கம் அரவணைத்துச் செல்ல வேண்டும். இதை பினாங்கு மாநில அரசாங்கம் கடைபிடிக்கும் என்று நாங்கள்  நம்புகிறோம் என்று அவர் மேலும்  சொன்னார்.

Exit mobile version