Site icon அநேகன்

கல்வி வழி இந்தியர்களை முன்னேற்ற  ஸ்ரீ முருகன் நிலையம் வியூகம்! சுரேன் கந்தா 

கோலாலம்பூர், ஜூன் 16-

கல்வி வாயிலாக இந்தியர்களை வறுமையில் இருந்து விடுபடச் செய்யும் முயற்சியாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் பி 40 மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டத்தை முன்னெடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன் பொருட்டு அரசாங்கத்தின் ஈ-காசே தரவு பட்டியலில் வறுமை கோட்டின் கீழ் பதிவு பெற்ற இந்திய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தாங்கள் இலவச கல்வியை வழங்குவதாக இந்நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா கூறினார்.

கெடா, பினாங்கு, பேரா, சிலாங்கூர், கோலாலம்பூர், மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் நடத்தப்படும் ஶ்ரீ முருகன் நிலையங்களில் ஈ-காசே பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் பள்ளி படிப்பு முடியும் வரையில் இலவசமாக கல்வி கற்கலாம் என்றார் அவர்.

அவ்வகையில் மாணவர்களுக்கு கல்வி கருத்தரங்குகள், சிந்தனைத் திறன் பட்டறைகள், தன்முனைப்பு பயிற்சிகள், கையேடுகள் ஆகியவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

கல்வியைப் பிரதானமாகக் கொண்டு ஶ்ரீ முருகன் நிலையம் கடந்த 43 ஆண்டுகளாக நாடு தழுவிய நிலையில் ஆயிரக்கணக்கான குடும்பங்களில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றி பயணத்தின் புதிய புரட்சியாக ‘ஜீரோ பி40’ திட்டத்தை இந்நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஶ்ரீ முருகன் நிலையத்தின் இளைஞர் படையைச் சேர்ந்த தொண்டூழியர்கள் தனது தலைமையில் இந்த குடும்பங்களை நேரில் சந்தித்து மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், உபகரணங்கள் மற்றும் அமர்ந்து படிப்பதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி வருவதாக அவர் விவரித்தார்.

வறுமையான குடும்ப பின்னணியைக் கொண்ட  ஷா ஆலாமைச் சேர்ந்த தேசன் த/பெ திருச்செல்வம் எனும் 5ஆம் படிவ மாணவர் ‘ஜீரோ பி40’ இலவச கல்வி திட்டத்தில் இடம் பெற்றுள்ளதை சுரேன் சுட்டிக் காட்டினார்.

‘ஜீரோ பி40’ இலவச கல்வி திட்டம் தொடர்பாக இந்திய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தை 011-1122 9464 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளும்படி சுரேன் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தேசிய கருத்தரங்கம் ஒன்றை மலாயா பல்கலைக்கழகத்தில் நேற்று ஏற்பாடு செய்தது.

‘அர்ஜூனா வியூகம் ‘ எனும் இக்கருத்தரங்கில் நாடு முழுவதும் இருந்து சுமார் 450 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மாணவர்களை எஸ்பிஎம் தேர்வுக்குத் தயார்படுத்தும் நோக்கத்தில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

இக்கருத்தரங்கின் நிறைவில் ஸ்ரீ முருகன் நிலையத்தின் ‘ஜீரோ பி40’ இலவச கல்வி திட்டத்தை இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்த சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Exit mobile version