Site icon அநேகன்

கிள்ளான் ஆற்றில் கைக்குழந்தை உட்பட 10க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுப்பு.

கிள்ளான், ஜூன் 16-

சிலாங்கூர் மேரிடைம் கேட்வே திட்டத்தின் கீழ் கிள்ளான் ஆற்றில் வெள்ளத்தடுப்பு திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்போது, புணரமைக்கப்பட்டு வரும் அந்த ஆற்றில் கைக்குழந்தை உட்பட 10க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆற்றில், சடலங்கள் கண்டெடுக்கப்படுவது தனித்து நிகழும் சம்பவமல்ல, மாறாக, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல், ஆற்றை ஆழப்படுத்தும் மற்றும் விரிவாக்கும் பணிகள் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் இது நிகழ்ந்து வருவதாக, வெள்ளத்தடுப்பு திட்டத்தின் முதன்மை மேம்பாட்டு நிறுவனமான லண்டாசன் லுமயான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைபுல் அஸ்மென் நோர்டின் தெரிவித்தார்.
ஒரே காலகட்டத்தில் தொடர்ச்சியாக 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர்,

இதுவரையில், தங்கள் தரப்பு 10-க்கும் மேற்பட்ட சடலங்களை மேல்கட்ட விசாரணைக்காக, போலீஸ் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினரிடம் ஒப்படைத்துள்ளதாக கூறினார்.

சடலங்கள் தவிர, கிள்ளான் ஆறு மோசமாக தூய்மைக்கேட்டிற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, குளிர்சாதன பெட்டிகள், லாரி டயர்கள், படுக்கை, மெத்தை, சோபா, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வகையான குப்பைகளும் ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இன்று கோத்தா கெமுனிங்கில் உள்ள வெள்ளத் தடுப்பு திட்ட மண்டலம் 8-இல் நடந்த கள ஆய்வுக்குப் பிறகு, சைபுல் அஸ்மென் நோர்டின் செய்தியாளர்களிடம் பேசினார்.

Exit mobile version