Site icon அநேகன்

ம.இ.கா. முன்னாள் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல் காலமானார்.

கோலாலம்பூர், ஜூன் 17-

ம.இ.காவின் 8ஆவது தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல் இன்று அவரது 76ஆவது வயதில் காலமானார்.

சில காலமாக உடல்நலக் குறைவால் இருந்து வந்த அவர், கடந்த ஒரு வாரமாக கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று காலை மணி 8.40 அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, ம.இ.காவுக்கு நெருங்கிய தரப்பு அநேகன் இணைய செய்தித்தளத்திடம் கூறியது.

1949ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி பினாங்கு, ஜோர்ஜ்டவுனில் பிறந்த டத்தோ ஸ்ரீ பழனிவேல், 1972-ஆம் ஆண்டில், மலாயா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுக் கல்வியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
தொடக்கக்காலத்தில் கோலாலம்பூரில் உள்ள கூன் கல்வி நிலையத்தில் ஆசிரியராகவும்; பின்னர் குவாந்தான் நகரில் உள்ள அடாபி கல்லூரியிலும் ஆசிரியராகவும் பணி புரிந்தார்.

அத்துடன் 1968-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய இந்திய காங்கிரஸில் கட்சி உறுப்பினராக இணைந்தார்.

பெர்னாமா செய்தி நிறுவனத்தில் ஊடகவியலாளராகவும் தொகுப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ள டத்தோ ஸ்ரீ பழனிவேல், பின்னாளில் ம.இ.கா. முன்னாள் தேசியத் தலைவர் துன் எஸ்.சாமிவேலுவுக்கு பத்திரிக்கை செயலாளராகவும் இருந்துள்ளார்.

மலேசிய அரசியலில் குறிப்பாக இந்திய சமூகத்தின் தலைவராக இருந்துள்ளதோடு, அமைச்சர், துணையமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.
பஹாங், கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரான அவர், பிரதமர் துறை அமைச்சர், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர், தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் துணை அமைச்சர், புறநகர் மேம்பாட்டு துணையமைச்சர்,மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

அன்னாரை இழந்துவாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு அநேகன் இணையச் செய்தி தளம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றது.

Exit mobile version