3 மாதக் குழந்தை ஒன்று தகப்பனாரின் கைகளில் இருந்தபோது, அவருக்கு இருதய செயலிழப்பு ஏற்பட்டதை அடுத்து அந்தக் குழந்தை அவரின் இறுக்கத்தின் காரணமாக மரணமடைந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலாக்கா ஜாலான் பெரிகி ஹாங்க் சாலையில் உள்ள வீட்டிற்கு சம்பந்தப்பட்ட ஆடவரின் மனைவி அஸுரா அப்துல் மாலிக் வேலை முடிந்து வீடு திரும்பிய பின்னர், படுக்கையறையில் தமது கணவர் நூருல் எஃபெண்டி இப்ராஹிம்(35) படுக்கையில் குழந்தையை அணைத்தபடி மூர்ச்சையற்றுக் கிடந்ததைக் கண்டுள்ளார்.
மருத்துவமனையின் பரிசோதனைக்குப் பின்னர் அவரது கணவரும் குழந்தையும் மரணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
தமது கணவர் மாரடைப்பினால் மரணடைந்திருப்பதாகவும் அவரின் கைகளில் இருந்த குழந்தை அவரின் கை இறுக்கத்தினால் மூர்ச்சையற்று இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இரு நாள்களுக்கு முன்னர் தமது கணவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறியதாகவும் ஆனால் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்து விட்டதாகவும் அஸுரா கூறினார்.

