Site icon அநேகன்

இந்திய மாணவர்களின் கல்விக்கு கலங்கரை விளக்காகத் திகழ்ந்தவர் தான்ஸ்ரீ தம்பிராஜா! சுரேன் கந்தா 

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24-

கல்வி வாயிலாக குடும்பம் மட்டுமின்றி சந்ததியினரும் செழிக்கும் என்பதை உணர்ந்து ஸ்ரீ முருகன் நிலையம் வழி பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கிய சாதனைச் சிகரம் பேராசிரியர் தான்ஸ்ரீ டத்தோ டாக்டர் எம். தம்பிராஜா என்று தெரிவிக்கப்பட்டது .

இந்தியர்களிடையே ஏழ்மை நிலையைப் போக்குவதற்கு ஒரே ஆயுதம் கல்வி. இதனை ஒவ்வொரு மாணவரிடத்திலும் கொண்டு சேர்ப்பதற்காக 1982 ஆம் ஆண்டு இவர் தொடங்கியதே ஸ்ரீ முருகன் நிலையம்.

இன்று இது ஓர்  ஆலமரமாக வளர்ந்து கல்விமான்களையும், பல்வேறு துறைகளில் நிபுணர்களையும் உருவாக்கியுள்ளது என்று இந்நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா விவரித்தார்.

கல்வி என வரும்போது அனைத்து இனங்களையும் அரவணைத்துச் செல்லும் உயரிய பண்பையும் தான்ஸ்ரீ தம்பிராஜா கொண்டிருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

தான்ஸ்ரீ தம்பிராஜா ஏற்றிய கல்வி எனும் தீபம் இன்று பல வீடுகளில் ஒளியேற்றி வருகிறது.

43 ஆண்டு கால பயணத்தில் நாடளாவிய நிலையில் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கிய பெருமை தான்ஸ்ரீ தம்பிராஜாவையே சாரும் என்று பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ முருகன் நிலையத்தில் அன்னாரின் இறுதி சடங்கிற்கு முன்பு செய்தியாளர்களிடம் விவரித்தார்.

ஸ்ரீ முருகன் நிலையத்தின் தந்தையாகப் போற்றப்படும் தான்ஸ்ரீ தம்பிராஜாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தனை செய்வதாகவும் சுரேன் குறிப்பிட்டார்.

இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் புரட்சியை ஏற்படுத்திய பேராசிரியராக வலம் வந்த தான்ஸ்ரீ தம்பிராஜா நேற்று காலமானார்.

அவரின் இறுதிச் சடங்கில் கல்வி, அரசியல், வர்த்தகம், உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், ஸ்ரீ முருகன் நிலைய மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், ஸ்ரீ முருகன் நிலைய குடும்பத்தினர் என நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அவரின் பிரிவு பலரின் மனதைக் கனக்க வைத்தது இறுதிச் சடங்கில் காண முடிந்தது.

 

 

Exit mobile version