புத்ராஜெயா, ஜூன் 25-
பெர்சாத்து கட்சி இளைஞர் பிரிவான அர்மாடாவின் நிதி முறைகேடு தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
நம்பிக்கை மோசடி, சொத்து தவறாக பயன்படுத்தியது, பணமோசடி உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவரை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்தது.
நீதிபதிகள் அஸ்மான் அப்துல்லா, நூரின் பதருதீன் உள்பட மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வுக்கு தலைமையேற்ற நீதிபதி அகமத் ஜைடி இப்ராகிம் அத்தீர்ப்பை வழங்கினார்.
கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விதித்த ஏழு ஆண்டு சிறை, இரண்டு பிரம்படிகள், 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் ஆகியவற்றை ரத்து செய்யும் சைட் சாடிக்கின் மேல்முறையீட்டை, நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீர்ப்பை வாசித்த நீதிபதி நூரின், சைட் சாடிக் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனக் கூறினார்.
அர்மாடா நிதியில் இருந்து 1 மில்லியன் ரிங்கிட் எடுக்க உத்தரவிட்டதில் அவருக்கு நேர்மையற்ற நோக்கம் இருந்ததாக அரசு வழக்கறிஞர்கள் நிரூபிக்கத் தவறிவிட்டனர்.
மேலும், அர்மாடா புமி பெர்சத்து எண்டர்பிரைஸ் (ABBE) வங்கிக் கணக்கில் இருந்து 120,000 ரிங்கிட் தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு நம்பகமான ஆதாரங்கள் இல்லை.
இதனால், பணமோசடி குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் நிலைநிற்கவில்லை எனவும் நீதிபதி கூறினார்.
முன்னதாக, சைட் சாடிக், கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி, கே.எல் சென்ட்ரலில் உள்ள வங்கி ஒன்றில் 1 மில்லியன் ரிங்கிட் தொடர்பான குற்றவியல் நம்பிக்கை மோசடியையும் 2018 ஏப்ரல் மாதம் 120,000 ரிங்கிட்டைத் தவறாக பயன்படுத்தியதாகவும், 2018 ஜூன் மாதம் 100,000 ரிங்கிட் பணமோசடி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

