Site icon அநேகன்

தெங்கு மைமூனின் பதவிக்காலத்தை நீட்டிக்க, அரசாங்கத்தை வலியுறுத்தும் போக்கை அன்வார் சாடினார்!

புத்ராஜெயா, ஜூன் 30-

நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட்டின் பதவிக்காலத்தை நீட்டிக்க, சில தரப்பினர் அரசாங்கத்தை வற்புறுத்தி வருவதை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார்.

அது, நீதித்துறையை அரசியலாக்கும் முயற்சி என்றும் அவர் கூறினார்.

“நீதிபதிகள் அல்லது பொதுச்சேவை ஊழியர்களின் ஓய்வு காலம் தானாக நீட்டிக்கப்படாது. இதை அரசியலாக்குவது தவறு.

அதுபோன்ற முயற்சிகள் பொதுச்சேவை ஊழியர்களிடையே தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும்.

உதாரணமாக, நாளை அரசாங்க தலைமைச் செயலாளரின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதாக இருந்தால், அதை நீட்டிக்க அவரும் முயற்சிக்கும் சூழல் ஏற்படும்” என பிரதமர் எச்சரித்தார்.

துன் தெங்கு மைமூன் நாளை (ஜூலை 1) 66 வயதில் கட்டாய ஓய்வு பெறுகிறார்.

துன் தெங்கு மைமூனின் பதவி நீட்டிக்கப்படாததால், அண்மையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அஸாம் பாக்கியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி சாடி வருகின்றனர்.

ஊழலுக்கு எதிராக தைரியமான நடவடிக்கைகளை முன்னெடுத்ததால் தான் ஸ்ரீ அஸாம் பாக்கியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதாக, டத்தோ ஸ்ரீ அன்வார் மே 23-இல் நடைபெற்ற பி.கே.ஆர். கட்சியின் காங்கிரஸ் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, நீதிபதிகளின் நியமனத்தில் பிரதமருக்கு முழு அதிகாரம் இல்லை என்றும் அது நீதித்துறை நியமனக் குழு (JAC), பேரரசர் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் வாயிலாக மட்டுமே முடிவு செய்யப்படுவதாகவும் விளக்கினார்.

“எனது முடிவுகள் அனைவரையும் திருப்திப்படுத்தாது,” என்று கூறிய அவர், நீதித்துறை விவகாரங்களில் தமக்கு அதிகாரம் இல்லாததற்கு, அண்மையில், முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக், முன்னாள் இளைஞர் விளையாட்டு அமைச்சர் சைட் சாடிக் ஆகியோரின் வழக்குகள் முடிவுகளே தக்க சான்று என்றார்.

Exit mobile version