பெசுட், ஜூன் 30-
புலாவ் பெர்ஹென்டியன் நீர்பகுதியில் சனிக்கிழமை இரவு படகு கவிழ்ந்த விபத்தில் இரு சிறார்கள் உள்பட மூவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, படகை செலுத்திய 22 வயது ஆடவர் விசாரணைக்காக 3 நாள்கள் தடுப்புக்காவலிடப்பட்டார்.
இன்று செத்தியூ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அந்த உள்நாட்டு ஆடவரை வரும் புதன்கிழமை வரையில் தடுத்துவைப்பதற்கான அனுமதியை, மாஜிஸ்திரேட் நூர்லியானா முகமட் சுக்ரி வழங்கினார்.
படகு விபத்தின் போது, அவ்வாடவர் போதைப்பொருளை உட்கொண்டிருந்தது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது 1952 ஆம் ஆண்டு அபாயக்கர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.
படகோட்டியின் மீது போதைப்பொருள் உள்பட 5 முந்தைய குற்றப்பதிவுகள் உள்ளதாக, பெசுட் மாவட்ட போலிஸ் தலைவர் சூப்பரிண்டெண்ட் அசாமுடின் அகமட் @ அபு நேற்று கூறியிருந்தார்.
கடந்த சனிக்கிழமை இரவு மணி 10.30 வாக்கில் புலாவ் பெர்ஹென்டியன் கெச்சில் தீவில் இருந்து புலாவ் பெர்ஹென்டியன் பெசார் தீவுக்கு செல்லும் வழியில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் பயணித்த படகு, மோசமான வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக கவிழ்ந்தது.
அதில், 40 வயது ஆறுமுகம் சக்திவேல், வெண்பனி விஜய ராஜ் (10), மற்றும் சார்விகா ஆறுமுகம் (3) ஆகிய மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மேலும், ஆறு வயது சிறுவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

